அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

கருணை பெருங்கடலே அன்னையே!

“சிறக்கும்‌கமலத்திருவே நின்‌சேவடி சென்னிவைக்கத்‌
துறக்கம்‌தருநின்‌துணைவரும்‌நீயும்‌, துரியமற்ற
உறக்கம்‌தரவந்து, உடம்போடு உயிர்‌உறவு அற்று அறிவு
மறக்கும்‌பொழுதென்முன்னே வரல்வேண்டும்‌ வருந்தியுமே.

எண்பத்தொன்பதாவது அந்தாதி’’“ஆதியாக” ஸ்ரீ வித்தியா உபாசனை நெறியில் மந்திரங்களை பெற்று பத்ததிகளை பின்பற்றி ஸ்ரீ சக்கர வழிபாடு செய்ய முதல் தகுதியாக சாத்திரத்தில் பரிந்துரைக்கப்படுவது தீட்சை. அது சைவம், வைணவம், சாக்தம் என்ற பல்வேறு சமயங்களில் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டாலும், தீட்சை எடுத்துக் கொள்ளும் முறையில் சில நுட்பமான வேறுபாடுகள் உள்ளது. அந்த நுட்பத்தை இந்த பாடலின் முதல் வரியில் பதிவு செய்கிறார். ஸ்ரீவித்யா என்ற தீட்சை முறையைப் பொறுத்தவரை பத்து படிநிலைகள் உள்ளன. அதில் ஐந்து சடங்குகளாலும் ஐந்து இறைவியின் அருளால் மட்டுமே பெறும் வகையில் அமைந்துள்ளது.

* முதலில் குருவானவர் ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வரை சீடனை கண்காணித்த பிறகே தீட்சை செய்து வைப்பார்.

* தீட்சை செய்து வைத்த பிறகு மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பூசனை முறைகளை கற்றுத் தருவார்.

* ஆறு மாதம் முதல் ஒன்றரை வருடம் வரைதான் செய்யும் பூசனையையும் இணைத்து தன்னுடன் பூசனைகளை செய்ய சொல்லி சீடன் செய்வதை கவனத்துடன் கண்காணிப்பார்.

* பிறகு, ஒரு வருடம் அவனைத் தனியே பூசனை செய்யச் சொல்லி அவன் சொல்லும் சில அடையாளங்களைக் கொண்டு திருத்தம் செய்வார்.

* அந்த சீடன் தனி அடையாளத்தைப் பெற்ற பிறகு தீட்ஷா நாமம் அளிப்பார். இதுவரை உள்ள உபாசனை பாகத்திற்கு குரு பாகம் என்று பெயர்.

* இதன்பிறகு சீடன் தன் முறையால் ஜெபம் செய்து வெற்றி பெற அதிக ஆவர்த்தி ஜெப யக்யம் செய்ய வேண்டும். பிறகு புறச்சரணம் இவை எல்லாம் செய்து குரு அங்கீகரித்த அடையாளத்தை எதிர்பார்த்து பூசனை செய்வான். இந்த பகுதியை வித்யா பாகம் என்று குறிப்பிடுவர்.

* உபாசனைக்கு மனம் இரங்கி உமையம்மையானவள் ஒரே நேரத்தில் குருவுக்கும் சீடனுக்கும் இரு இடத்திலும் இரகசிய சொல்லை உபதேசம் செய்வாள். இதை தேவ பாகம் என்பர்.

* தேவதை சொன்ன வழி தன் செயல்பாடுகளைத் தொடர்ந்தால் உபாசகனுக்கு உதவ ஒரு க்ரியா தேவதை தானாக முன்வந்து உதவும்.

* அதைக்கொண்டு உபாசகன் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் மட்டுமே சில நன்மைகளை செய்து கொள்ள முடியும்.

*பத்தாவது நிலையில் உபாசகன் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றலையும் ஆன்ம ஞானத்தையும் பெறலாம். இதுதான் உபாசனை நெறி. இந்த படிநிலைகளில் பத்தாவது படிநிலை பற்றியே இந்த பாடலின் முதல் வரியில் பேசுகிறார். அதை இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

* சிறக்கும்‌ கமலத்திருவே நின்‌சேவடி சென்னிவைக்க
* துறக்கம்‌ தருநின்‌துணை வரும்‌நீயும்‌,
* துரியமற்ற உறக்கம்‌தரவந்து,
* உடம்போடு உயிர்‌உறவு அற்று அறிவு மறக்கும்‌பொழுது
* என்முன்னே வரல் வேண்டும்‌ வருந்தியுமே.

இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.

“சிறக்கும் கமலத் திருவே
நின் சேவடி சென்னி வைக்க’’

என்பதனால் உமையம்மை நேரடியாக உபாசகனை தீண்டி தன் திருவடிகளை அவன் தலை மீது வைத்து அவனது ஊழ்வினை கருமத்தை நீக்கி அருள் புரிந்து ஆட்கொள்வாள். என்பதையே அபிராமிபட்டர் “சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்க’’ என்கிறார்.

“துறக்கம் தரு நின்
துணைவரும் நீயும்’’

என்பதனால் அந்தணர்கள் இறப்பு சடங்கில் ருத்ரனையும் அவரின் துணைவியான கௌரியையும் வணங்குவர். அவர்கள் இருவரும் இணைந்து ஆன்மாக்களை தன் மடியில் கிடத்தி அதன் காதுகளில் பிறவிப்பிணி தீர்க்கும் மந்திரத்தை ஓதுவர். கைலாயத்திற்கு செல்ல காளை மாட்டையும் மலர்மாலையையும் அனுப்புவர். இந்த சடங்கை “விருஷோத்ஷர்ஜனம்’’ என்று குறிப்பிடுவர். இதை அபிராமிபட்டர் ‘வெண்பகடூரும் பதம்’ (91) என்கிறார். இறந்த பிறகு செய்ய வேண்டிய இந்த சடங்கின் தத்துவத்தை உணர்ந்து வாழும்போதே ஊனை விட்டு உயிரை பிரித்து மீண்டும் உள்ளே புகச்செய்து ஆன்மாவின் அனுபவத்தை வாழும்போதே பெற முயற்சி செய்வது தியானத்தினால் நடைமுறை சாத்தியப்படும். இந்த அப்யாசத்தை முயற்சி செய்து அதன் பயனை தர “துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும்’’ வரவேண்டும் என்கிறார். இதை ஒரு புராணத்தைக் கொண்டு காண்போம்.

நிலை தெரியாமல் தடுமாறும் ஆன்மாக்களுக்கு சிவசக்தி அளிக்கும் அமைதியையும் ஆனந்தத்தையும் காண்போம். பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி சுவாமி உலகங்கள் அனைத்தையும் உருவாக்கும் அகிலாண்ட ஈஸ்வரரான தாங்கள் ஆனந்தமாக மாளிகைகளிலும் நந்தவனங்களிலும் வாசம் செய்யாமல் அகோரமான மயானத்தில் வசிப்பது ஏன் என கேட்டாள்.

அம்மயானத்தில் ஏராளமான பிணங்களை எரிப்பதால் எலும்பு, ரத்தம், மாமிசம் இவற்றால் ஏற்பட்ட துர்நாற்றம் மிகுதியாய் இருக்கும். பூதப், பிரேதம் பைசாசங்கள் குடியிருப்பதும், காகம், கழுகு, பருந்து, முதலிய பறவைகளும் செந்நாய் முதலிய மிருகங்களும் வாசம் செய்வதும், பிரேத மந்திரங்களை உச்சரிக்கும் இடமாயும் உள்ள மயானத்தில் தாங்கள் யானைத் தோலையும், புலித் தோலையும் உடுத்தி பிரம கபாலத்தையே மாலையாகப் பூண்டு எப்பொழுதும் அட்டகாசம் செய்து முவுலகங்களும் நடுங்கச் சிரித்துக் கூத்தாடிக் கொண்டு பித்தம் பிடித்தவரைப் போல் வசிப்பது ஏன்? வேதங்களுக்கும் எட்டாத வடிவினரான உங்களுக்கு அந்த சுடுகாட்டில் பிரியம் ஏற்படக் காரணம் என்ன? என்று கேட்டாள் பார்வதி.

சிவபெருமான் மலர்ந்த முகத்துடன் உலக மாதாவான பார்வதி தேவியை நோக்கி சொல்லத் துவங்கினார்‌. சர்வ சம்ஹார காலத்தில் அண்டங்களையும் பிரம்மாண்டங்களையும் பிரமாதி தேவர்களையும் கருடாதி கணங்களையும் எல்லாவற்றையும் அழிக்கத் தக்கதாய் பஞ்சபூதங்களில் ஒன்றால் சங்கரித்து யாவும் அழியும்படி ஒருவனாக நின்று சம்ஹாரக்ருத்தியம் செய்வேன். அப்போது நீ ஒருத்தியே என் அருகில் இருப்பதால், அச்சமயத்தில் நான் நடனம் செய்யவும் நீ என் நடனத்திற்கு ஏற்ப கைத்தாளம் போடவுமாய் இருப்பாய் என்றார்.

இதையே பட்டர் ‘நடமாடும் துணைவருடன் புல்லும்’ (28) என்கிறார். மேலும், அந்த பெருந்தேவர்களின் உடல்கள் விழுந்து கிடக்கும் மயானத்தை முழுவதும் சுற்றி நடனம் செய்வதால் எனக்கு சுடலையாடி என்றதொரு பெயரும் உண்டு. ஒரு சமயம் நான் [சிவன்] மயானத்தில் ஆனந்தமாய் நடனஞ் செய்து கொண்டிருக்கையில் பற்பல பூத வேதாளங்கள் எல்லாம் தாளம் போட்டு கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தன. அச்சமயம் பல தேவர்களுடன் அங்கு வந்த விஷ்ணு ஐயனே இங்கு நடனம் செய்வதும் பூதப் பிரேதப் பைசாசடாகினி, பாடவும் தாளம் போடவும் கொக்கரிக்கவும் கூத்தாடவும் இருப்பது மிகச்சிறந்ததுதான் அவ்வாறு செய்யாவிட்டால் இக்கணங்கள் பூவுலகமெங்கும் பரவி முக்தியடையாமல் பலரையும் துன்புறுத்தும்.

அவை துன்புறாதவாறு அதற்கு சரியான நிலை கிடைக்கவும் செய்பவனாக இருப்பதே உத்தமமான செயலாகும். ஆக்கல், காத்தல், அழித்தல் என்பவற்றையும் இயற்றுவிக்கும் ஆற்றல் உடைய மகாதேவரே நீர் இவ்வண்ணம் மயானத்திலே எப்பொழுதும் கூத்தாடிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவ்விஷ்ணுவும் உடன் வந்த தேவர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மயானத்தையே எனக்கு வசிக்கும் இடமாக்கிக் கொண்டேன்.

நானே, காலரூபி, நீயே காளராத்திரி. என் ரூபத்தை நீயே அறிவாய். உன் சொருபத்தை நான் அறிவேன். நீயே நாராயணனுக்கும் சமமானவள் நீயும், நானும் சமமானவர்கள் என்ற வார்த்தையால் ஆன்மாவுக்கான நலனை குறித்தே அபிராமி பட்டர் “துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும்’’ என்கிறார். இந்த வரியானது ஆன்மாவிற்கும் இறைவிக்கும் உண்டான தொடர்பை விளக்கி கூறுவதாக அமைந்துள்ளது. அதன் விளக்கத்தை சாக்த சமயம் சார்ந்து அறிந்து கொண்டால் மட்டுமே, இதன் பொருட்செறிவைப் புரிந்து கொள்ள முடியும். ஆன்மக் கொள்கையை ஐந்து விதமாக விளக்குகிறது சாக்த தந்திரம். அதை ஒவ்வொன்றாய் இனிக் காண்போம்.

ஆன்மாவின் இலக்கணம்

ஆன்மா என்பது அழிவற்றது, அறிவு என்ற ஒரே பொருளால் ஆனது. உடலோடு இணைந்தாலன்றி தன்னை அறிய இயலாதது. அறிவித்தால் அறியும் பண்பு கொண்டது. அறிவித்தாலன்றி, தான் சுயமாக அறிய இயலாதது. பஞ்சபூதமான தீயில் எரியாது, நீரில் நனையாது, காற்றில் கரையாது, கடினமான பூமியில் அடங்காது, ஆகாயத்தில் ஒடுங்காதது.

இந்த ஐந்தும் சேர்ந்தே உடலுக்குள் ஒடுங்குவது, இதையே பிரம்ம, சூத்திரம், சாரீரகம் [சரீரத்திற்குள் இருப்பது] என்பதிலிருந்து தன்னை ஆன்மாவாக கருதாது எந்த உடலுக்குள் இருக்கின்றோமோ அந்த உடலாக தன்னை கருதுவது. தன் உண்மை இயல்பை தன் முயற்சியால் அறிய இயலாதது. இறைவியின் அருளால் மட்டுமே அறியும் பண்பை உடையது.

இறைவியின் இலக்கணம்

இறைவி ஒருத்தியே ஆன்மாவிற்கு ஒன்றாக இருக்கும். இவள் உலகில் தோன்றும் பொருளில் பலவாக தோன்றுகின்றாள். ஆன்மாவிற்கு பலவாக தோன்றுவதன் காரணம் தன்னை தான் உணராமல் மாயையினால் அது துன்பப்படுவது. மாயையானது ஞானத்தினால் விலகிவிடும். தன்னைத்தான் உணர்தல் என்பது அனைத்து துன்பங்களிலிருந்தும் நம்மை விடுவித்துவிடும். அதற்கு சாதனம்தான் ஞானம். அந்த ஞானத்தை ஆன்மாக்களுக்கு அளிக்கவே உமயம்மையானவள் ஒவ்வொரு பொருளிலும் வெவ்வேறு தன்மையை பெற்று விளங்குகின்றாள். உதாரணமாக, ஜடப்பொருள் அனைத்திலும் இயக்கமாகவும். சித்பொருள் அனைத்திலும் மித்யையாகவும்.

ஒன்றை வேறொன்றாக காட்டுவது] தன்னில்தான் உண்மையில் ஆனந்த வடிவாகவும் இருக்கும் அவள் ஆனந்தமாக தோன்றாமல் மித்யையாகவும் இயக்கமாகவும் தோன்றுகின்றாள் என்பதை தன்னை தவறாக உணர்ந்து கொள்ளும் ஆன்மாவிற்கு உணர்த்தி ஆனந்தமயமாக்குவதே அவளது பெரும் கருணை.

அஞ்ஞானத்தினால் துன்பத்தையும், அழிவையும், இறப்பையும், ஞானத்தினால் இன்பத்தையும், அழியாத நிலைப்பெற்ற தன்மையும், இரவா நிலையையும், ஆன்மாக்களுக்கு அனுபவ சாத்தியப்படுத்துகின்ற பேராற்றலே, இயக்கமே, அறிவே, பேரானந்தமே இறைவி. இதையே பட்டர் ‘ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர்’ (7) என்று அஞ்ஞானத்தையும். ‘ஆனந்தமாய் என் அறிவாய்’ (11) என்று ஞானத்தையும் ‘ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகுஎங்குமாய் நின்றாள்’ (56) என்று இறைவியின் உண்மை தன்மையை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் appeared first on Dinakaran.

Related Stories: