வித விதமான விபரீத ஆசைகளாலும், எண்ணியவற்றை எல்லாம் பெறமுடியாத ஏக்கங்களாலும், எதிர்காலம் எப்படி இருக்குமோ என்னும் கவலையாலும், ஒவ்வொருவரின் மனமும் மாயையிலே சிக்கி நிலையில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது.
‘கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய்!’
திருச்செந்தூரில் திருக்காட்சி தந்தருளும் திருமுருகப் பெருமானே! நீ தான் மாயைச் சூழலில் திக்கு முக்காடும் அடியேனுக்கு உரியதிசை காட்டி ஈடேற்றவேண்டும். இருபுறமும் தீப்பிடித்து எரியும் ஒரு கொம்பின் இடையில் மாட்டிக் கொண்ட சிற்றெறும்பு என்ன படாத பாடு படும்? அப்பக்கமும் அதனால் செல்ல முடியாது. இப்பக்கமும் அதே அதோகதிதான்.‘கொள்ளித் தலையில் எறும்பு’ என மாயை, கவலை, ஆசையில் சிக்கி அல்லல்படும் மனித மனத்தை அருணகிரியார் போலவேதான் மணிவாசகரும் பாடி
உள்ளார்.
“இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப்பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய்’’
– என்பது திருவாசகம்.
தெய்வீக சிந்தனை என்னும் இறை தியானம் மட்டுமே மனித மனத்திற்கு ஆறுதலும், அமைதியும் தரக்கூடியது.
“தனக்கு உவமை இல்லாதன்
தாள் சேர்ந்தார்க்கு அல்லால
மனக்கவலை மாற்றல் அரிது’’
– என தீர்மானமாகச் சொல்கிறார் திருவள்ளூவர்.
துள்ளி வருகின்ற வேல், என் துயர்களைக்களையும் என்கிறார்
மகாகவிபாரதியார்.
“கருதி கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல்!’’
செந்தூர் கடலிலே நீராடி, கந்த வேளின் தரிசனம் கண்டு, சிந்தையிலே அமைதி பெற்று சந்தம் மிகுந்து வரும் செந்தமிழில் ‘‘அசுரக் கூட்டத்தை அடியோடு அழித்த வேலவரே! அதைப் போல ஆசைகள் அலைபோதும் என மனமாயைகளை அகலச் செய்து தங்கள் திருவடியில் நிம்மதியான நிலை பேற்றைத் தந்தருளுக’’ என வேண்டுகிறார்.
‘‘செங்கைவேல், வென்றிவேல் கொண்டு சூர் பொன்றவே
சென்று மோதும் பிரதாபா!
செங்கண்மால், பங்க ஜானன் தொழானந்தவேல்
செந்தில் வாழ் தம்பிரானே!’’
‘செங்கண்மால்’ என்றால் தாமரைக் கண்ணனாகிய திருமாலைக் குறிக்கும். ‘பங்கஜானன்’ என்றால் செந்தாமரையை ஆசனமாகக் கொண்டு வீற்றிருக்கும்
பிரம்மாவைக்குறிக்கும்.
ஆனந்தவேல், செங்கைவேல், வென்றிவேல் என அடைமொழிகள் பல பெற்ற வேலைத்தாங்கி, பிரம்மன், விஷ்ணு இருவரும் தொழும் மகிமை பெற்ற வள்ளி மணாளரே! என்று நிறைவுறும் இத்திருப்புகழ் முழுவதையும் பார்ப்போம்!
``சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே
சஞ்சலா ரம்ப மாயன்
சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
சம்ப்ரமா நைத மாயன்
மங்கைமார் கொங்கை சேர் அந்தமோ கங்களால்
வம்பிலே துன்புறாமே
வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
வந்து நீ அன்பிலான்வாய்!
கங்கை சூடும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே விஞ்சை யூரா
கம்பியா திந்திரலோ சங்கள்கா வென்றவா
கண்டேலே சன்சொல்வீரா
செங்கைவேல் வென்றிவேல் கொண்டு சூர் பொன்றவே
சென்றுமோ தும்ப்ரதாபா
செங்கண்மால் பங்கஜா னன்தொழா னந்தவேள்
செந்தில்வாழ் தம்பிரானே!
‘‘சங்கைதா னொன்றுதா னின்றியே
நெஞ்சிலே’’
என்று தொடங்கும் இச்செந்தூர் திருப்புகழில் நாற்பத்தெட்டு பதங்கள் (சீர்) அடங்கி உள்ளது. ஒவ்வொரு சீரையும் ஊன்றிப் பார்த்தால் அனைத்து பதங்களிலும் இரண்டாவது எழுத்து புள்ளிவைத்த மெய் யெழுத்தாகவே பொரிகின்றது. பாட்டு முழுவதிலும் பயின்று வந்துள்ள அத்தனைப் பதங்களிலும் அதாவது நாற்பத்தெட்டு சீர்களிலும் இரண்டாவது எழுத்து மெய்யெழுத்தாகவே உரியதாளக் கட்டுடன் பொருந்தி உள்ளது. இக்காலத்தில் நாம் மூளையைக் கசக்கிப் பிழிந்து பல காலம் முயன்றாலும், இப்படி இயற்ற முடியுமா?சந்தப் புலவரான அருணகிரியார்க்கு சண்முகக் கடவுள் அளித்த சன்மானம்தான் உயரிய திருப்புகழ் என்றறிந்து உவகை கொள்வோம்!
“கணக்கற்றுப் பெருகும் ஆசைக் கடலிலே
துரும்பாக அகப்பட்ட என் மனம் அமைதி அடையவும்,
விலை மகளிர் பால் தாவும் என் விபரீத எண்ணங்கள்
அற்றுப் போகவும் வேலவா! நீ தான் உகந்த
வழியைக் காட்டி உதவி புரிய வேண்டும்’’.
சிங்கார ரூபரே! சிவகுமாரரே! இந்திரன் முதலாகிய தேவர்கள் நிம்மதியாக வாழ நிருதர் கூட்டத்தை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் வீழ்த்திய வீரரே! ஞானமே வடிவாகிய நாயகரே! திருச்செந்தூர் மேவிய தேவாதி தேவரே! மேற்கண்ட பொருள் அடங்கிய இத்திருப்புகழில் அந்தனே, விஞ்சை யூரா, ஆனந்தவேள் என்னும் மூன்றும் பதங்களில் முருக வேளின் சீர்த்தி புலப்படுகிறது.‘அந்தனே’ என்றால் அழகில் மிக்கவரே என்று பொருள்.
‘அந்தம் வெகுவான ரூபக்காரா’ என்றும் அகலாத இளமைக்கார
– என்று பிறிதொரு திருப்புகழில் பேசுகிறார் அருணகிரியார்.
இளமையும், எழிலும் வாய்ந்தவர் முருகப் பெருமாள்!
‘விஞ்சையூரா’ என்றால் ஞான நூல்
களையே
உறைவிடமாகக் கொண்டவர் என்று பொருள்.
ஞானமே உருவாகிய நாயகன் – என்று கந்தபுராணம் வேலவன் வடிவை விவரிக்கின்றது.
‘‘தந்தைக்கு முன்னம் தனி ஞான வாள் ஒன்று
சாதித்தருள் கந்த சுவாமி’’
– என்பது கந்தர் அலங்காரப் பாட்டு.
‘ஆனந்த வேள்’ என்பது உன்னதமான மகிழ்ச்சியின் உருவமே திருமுருகனின் வடிவம் என்பதை உணர்த்துகிறது. சிவபெருமான், பார்வதி நடுவில் முருகன் – இத்தோற்றம் சேமாஸ்கந்த மூர்த்தம் என பேசப்படுகிறது. இத்தோற்றத்தில்தான் சிவபெருமான் வீதி உலா வருவார்.
சத்து – சிவபெருமான்
சித்து- அம்பிகை
ஆனந்தம்- முருகப் பெருமான்
சச்சிதானந்தமாக காட்சி அளிக்கும் சொரூபத்தைப் பாம்பன் அடிகள் இப்படிப்பாடுகிறார்.
‘சத்து’ எனப்படும் தாவில் சிவத்திலும்
‘சித்து’ எனப்படும் தேவி இடத்திலும்
புத்திரப் பெயர் பூண்டு இலகும் ஆனந்ச
வத்துவின் கழல் வாழ்த்தி வணங்குவாம்ஃ
அழகு, ஞானம், வீரம், ஆனந்தம் அனைத்தும் இணைந்த அதி அற்புத வடிவினரே வடிவேலன் என உணர்ந்து வணங்கி வாழ்வு பெறுவோம்!
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்
The post துள்ளி வருகுது வேல்! appeared first on Dinakaran.