வண்டலூர்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு காவல் துறையில் காலியாக இருந்த 2,665 இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணியிடம் நிரப்பப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட 2,665 காவலர்களில், 779 பேர் பெண்கள் ஆயுதப்படையிலும், 1,819 பேர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையிலும், பின் தங்கிய 67 பேரில் 13 பெண்கள் ஆயுதப்படைக்கும் மற்றும் 12 ஆண்கள் ஆயுதப்படைக்கும், 42 பேர் தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கும் பணியமர்த்தப்பட்டனர். அதற்கான பணி நியமனங்களை கடந்த 27ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 7 மாத கால அடிப்படை பயிற்சியும், ஒரு மாத கால நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படும்.
இப்பயிற்சியானது திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் அளிக்கப்படும்.அதன்படி 8 பயிற்சி பள்ளிகளிலும் நேற்று பயிற்சி தொடங்கியது. அடிப்படை பயிற்சியின் போது, பயிற்சி காவலர்களுக்கு வெளிப்புற மற்றும் உட்புற நடவடிக்கைகள் சம்மந்தமான பயிற்சி அளிக்கப்படும். வெளிப்புற செயல்பாடுகளில் உடல் பயிற்சி, கவாத்து அணிவகுப்பு, துப்பாக்கிச்சூடு, கமாண்டோ பயிற்சி, ஜங்கிள் பயிற்சி போன்றவை அடங்கும். மேலும் உட்புற செயல்பாடுகளில் சட்டம், கைரேகை, முதலுதவி, அறிவியல் சார்ந்த புலனாய்வு, உளவியல், வாழ்க்கை நெறிமுறைகள் மற்றும் வாழ்க்கை சமநிலை போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.
இவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலமாக சென்னை வண்டலுாரில் உள்ள காவல் பயிற்சி தலைமையகத்திலிருந்து காவல்துறை தலைவர் ஜெயகவுரி, துணை தலைவர் ஆனி விஜயா ஆகியோர் வரவேற்று அறிவுரை வழங்கி தொடங்கி வைத்தனர். இரண்டாம் நிலை பெண் காவலர்களாக திருவண்ணாமலையில் 45 பேர், விழுப்புரத்தில் 44 பேர், கடலூரில் 36 பேர், வேலூர், புதுக்கோட்டையில் தலா 24 பேர், ராமநாதபுரத்தில் 22 பேர், தஞ்சாவூர், திருவாரூரில் தலா 19 பேர், அரியலூரில் 14 பேர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, கரூரில் தலா 11 பேர், மயிலாடுதுறையில் 9 பேர், திருச்சியில் 8 பேர், பெரம்பலூரில் 3 பேர் என மொத்தம் 300 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் 283 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். திருவள்ளூர் காவல் பயிற்சி பள்ளியில் காவல் பயிற்சி தலைமையக எஸ்பி மகேஸ்வரி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு காவலர் பயிற்சி பெற வந்த 283 பெண் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பெண் காவலர்கள் பணி மேற்கொள்வது குறித்து விளக்கி பேசினார்.
The post புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் 2,665 பேருக்கு பயிற்சி தொடக்கம் appeared first on Dinakaran.