வேலூர், டிச.4: பெஞ்சல் புயல் மழை காரணமாக கால்நடைகள் வரத்தின்றி பொய்கை மாட்டுச்சந்தை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தின் பிரபலமான கால்நடை சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தையும் ஒன்று. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கூடும் இச்சந்தைக்கு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், கரந்ாடக மாநிலம் கோலார் மாவட்டங்களில் இருந்தும் கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள், ஆடுகள், கோழிகள் ஆகியன விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சீசன் நேரங்களில் ₹1 கோடி வரையும், சாதாரண நாட்களில் ₹50 லட்சம் வரையும் விற்பனையாகும். ஆனால் நேற்று பொய்கை மாட்டுச்சந்தை உள்்ளூர் கால்நடை வியாபாரிகளால் வெறும் 200 கறவை மற்றும் உழவு மாடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. விற்பனை என்பது ₹5 லட்சத்துக்கும் கீழே சரிந்ததாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக கால்நடை வியாபாரிகள் கூறும்போது, ‘கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் புயல் மழை தீவிரம் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் பொய்கை மாட்டுச்சந்தைக்கு எதிர்பார்த்த அளவில் கால்நடைகள் வரத்து இல்லை’ என்றனர்.
The post வெளியூர் கால்நடைகள் வரத்தின்றி வெறிச்சோடிய பொய்கை மாட்டுச்சந்தை விற்பனை கடும் சரிவு பெஞ்சல் புயல் மழை எதிரொலி appeared first on Dinakaran.