சீனா வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடி; லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் தேசியக்கொடி ஏற்றிய ராணுவம்: புத்தாண்டு சர்ச்சைக்கு முடிவு

புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தனது தேசிய கொடியுடன் புத்தாண்டு வாழ்த்து கூறிய வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கில் மூவர்ண தேசியக் கொடி ஏற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு நாட்டு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, மோதல் நடந்த இடத்தில் இருந்து 2 கிமீ தொலைவுக்கு இரு தரப்பிலும் படைகள் பின்வாங்கப்பட்டுள்ளன. ஆனாலும், டெப்சாங், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இன்னும் இரு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கிழக்கு லடாக், சிக்கிம் உள்ளிட்ட அசல் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியின் 10 இடங்களில் புத்தாண்டு தினத்தன்று சீனாவுடன், இந்திய ராணுவம் இனிப்புகளை பரிமாறிக் கொண்டது. ஆனால் சீனாவின் தேசிய ஊடகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் கூடி, சீன தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்து, தேசிய கீதம் பாடினர். கல்வானில் இருந்து நாட்டு மக்களுக்கு சீன ராணுவம் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக அந்த வீடியோவில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. கல்வானில் மோதல் நடந்த இடத்தை சீனா ஆக்கிரமித்து அங்கு தேசியக் கொடியை ஏற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், புத்தாண்டு தினத்தில் இந்திய ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கில் தேசியக் கொடியை ஏற்றிய புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.ஒன்றிய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இப்புகைப்படங்களை தனது டிவிட்டரில் பதிவிட்டார். அதில், ‘3 புகைப்படங்களில் இந்திய வீரர்கள் பனி மலைக்கு மத்தியில் மூவர்ண தேசியக் கொடியை உயர்த்தி பிடித்தபடியும், கம்பத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டபடியும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீனாவின் வீடியோவுக்கு இந்தியா என்ன பதிலடி தரப்போகிறது என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பிய நிலையில் இத்தகைய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன’. அதே சமயம், சீனா சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தேசியக் கொடியை ஏற்றவில்லை எனவும், அதனுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலேயே தேசிய கொடி ஏற்றியதாகவும் சீன ஊடகம் தரப்பில் விளக்கம் தரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரதமர் அமைதி காப்பது ஏன்?-ராகுல் கேள்விஅசல் எல்லை கோட்டிற்கு அருகில் கடந்த 2 மாதமாக சீனா பாலம் கட்டி வருவதாக நாளிதழ்களில் வெளியான செய்திகளை டிவிட்டரில் இணைத்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `பிரதமர் மோடி காது கேளாதது போன்று மவுனம் காக்கிறார். நமது நாடு, நமது மக்கள், நமது எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,’ எனக் கூறியுள்ளார்….

The post சீனா வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடி; லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் தேசியக்கொடி ஏற்றிய ராணுவம்: புத்தாண்டு சர்ச்சைக்கு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: