புதுடெல்லி: மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சகத்திடம் திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன் எம்.பி. எழுப்பிய கேள்விகள் வருமாறு:
* ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் தனிநபரின் ₹ 5 லட்சம் வரையிலான ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுமா?
* ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலோ, ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி வருவாயில் ஏற்படும் தாக்கம் என்ன?
* ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படும் பட்சத்தில், பிரீமியம் தொகையின் முழுப் பலனும் காப்பீட்டாளர்களுக்குத்தான் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகிறது என்பதை ஒன்றிய அரசு எவ்வாறு உறுதி செய்யும்?
* இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் விகிதங்களைக் கண்காணிப்பதற்கும், ஜி.எஸ்.டி. வரி குறைப்பிற்கேற்ப காப்பீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் அந்நிறுவனங்கள் திட்டங்களில் திருத்தம் மேற்கொள்கிறதா என்பதனை கண்காணிப்பதற்குமான அதிகாரங்களை பெற்றுள்ளதா? அல்லது அதற்கான புதிய வரைமுறைகளை ஏதேனும் முன்மொழிந்துள்ளதா?
* மருத்துவக் காப்பீட்டின் ஜி.எஸ்.டி. வரியை குறைப்பதனால், விளிம்புநிலை மக்களும் சுகாதாரப் பாதுகாப்பைப் பெற வழிவகை செய்யும், அந்த வகையில் விளிம்பு நிலை மக்களுக்கும் மருத்துவக் காப்பீட்டைக் கொண்டு சேர்க்க ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.
The post மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்குவது எப்போது?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.