மரணமடைந்த எம்எல்ஏவின் மகனுக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலையா?… கேரள அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் செங்கணூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவாக இருந்தவர் கே.கே. ராமச்சந்திரன். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் மரணமடைந்தார். இந்நிலையில் கடந்த 2018 ஜனவரியில் கே.கே. ராமச்சந்திரனின் மகன் பிரசாந்துக்கு வாரிசு நியமன அடிப்படையில் கேரள பொதுப்பணித் துறையில் உதவி பொறியாளர் பணி வழங்கப்பட்டது. பிரசாந்துக்காக இந்தத் துறையில் ஒரு சிறப்பு பதவி உருவாக்கப்பட்டது. இந்நிலையில் அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பாலக்காட்டைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், எம்எல்ஏவின் மகனுக்கு வாரிசு நியமன அடிப்படையில் வேலை வழங்க முடியாது என்று கூறி அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, மரணமடைந்த எம்எல்ஏவின் மகனுக்கு வாரிசு நியமன அடிப்படையில் பணி வழங்க அரசுக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது என்றும், பிரசாந்துக்கு உரிய தகுதிகள் இருந்ததால் தான் பணி வழங்கப்பட்டது என்றும் கேரள அரசு தரப்பில் வாதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, அரசின் சிறப்பு அதிகாரத்தை இது போன்ற காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், மக்கள் பிரதிநிதிகளின் வாரிசுகளுக்கு வாரிசு நியமன அடிப்படையில் பணி வழங்க முடியாது என்றும் கூறி கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

The post மரணமடைந்த எம்எல்ஏவின் மகனுக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலையா?… கேரள அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Related Stories: