கொல்கத்தா: வங்கதேசத்துக்கு ஐநா அமைதிக்குழுவை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபையை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,‘‘வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவித்திருக்க வேண்டும். அவரால் அறிவிப்பு வெளியிட முடியாத நிலையில் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் தெரியப்படுத்த வேண்டும்.
வங்க தேசம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு எனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. எனினும் அங்கு சமீபத்தில் நடந்த சம்பவங்கள்மற்றும் அங்கு இருப்பவர்களின் கருத்துகள், அனுபவங்களை பொதுமக்கள் பலர் கூறியதை அடுத்தும் இஸ்கான் பிரதிநிதிகளுடன் நடத்திய உரையாடல்களில் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் தேவைப்பட்டால் ஐநா அமைதி காக்கும் குழு வங்கதேசத்திற்கு அனுப்பப்பட வேண்டும். இதற்காக ஐநாவை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்” என்றார்.
எல்லையில் சாமியார்கள் போராட்டம்
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், கைது செய்யப்பட்ட இந்து மத தலைவர் சின்மோய் கிருஷ்ணாவை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய-வங்கதேச எல்லையில் போராட்டம் நடத்தப்பட்டது. மேற்கு வங்கம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரம் சாமியார்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
The post வங்கதேசத்துக்கு ஐநா அமைதிக் குழுவை அனுப்ப வேண்டும்: மம்தா வலியுறுத்தல் appeared first on Dinakaran.