கொடுமுடி,நவ.30: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாட்களில் 100 ரேஷன் கடைகள் முன்பாக தொடர் போராடங்களை நடத்த தீர்மானித்து 44வது நாள் போராட்டமாக கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் அமைந்துள்ள அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட தலைவர் யுவராஜ்,கரூர் மாவட்ட தலைவர் பாலுகுட்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வெளிநாடுளிலிருந்து ஆண்டுக்கு 4,500 கோடி மானியமாக கொடுத்து பாமாயில் இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு பதிலாக,உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்யை முழுமையாக கொள்முதல் செய்து, மானிய விலையில் ரேஷன்கடைகள் மற்றும் சத்துணவு கூடங்களில் வினியோகம் செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இதில், சங்கத்தின் மாநில அவைத்தலைவர் பாலசுப்பிரமணி, அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.