ஈரோடு,நவ.22: ஈரோட்டில் தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தினை விரிவுப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் 60 வார்டுகள் உள்ளன.கடந்த 2 ஆண்டுகளாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதில், சில நாய்களுக்கு வெறி பிடித்து நடந்து செல்லும் பாதசாரிகளையும், வாகனங்களில் செல்பவர்களையும் கடித்து வந்தது. மேலும், சில பகுதிகளில் கால்நடைகளையும் கடித்து கொன்றது.
இதனால், மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கவுன்சிலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதன்பேரில், மாநகராட்சி பகுதியில் சுற்றிதிரியும் தெரு நாய்களை பிடித்து, சோலாரில் உள்ள தெரு நாய்கள் கருத்தடை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு, வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போதுள்ள கருத்தடை மையத்தினை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் நேற்று சோலாரில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அங்கு, தினசரி கருத்தடை செய்யப்படும் நாய்களின் எண்ணிக்கை, அவற்றை பராமரிக்கும் விதம் குறித்து கேட்டறிந்தார். தொடா்ந்து, கருத்தடை மையத்தை விரிவுப்படுத்தப்படும் இடத்தை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post நாய்களுக்கான கருத்தடை மையத்தை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.