திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று இரவு முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருவதை பார்க்க முடிகிறது. அதேபோல் அரவணை, அப்பம் வாங்க நீண்ட வரிசையில் பக்தர்கள் நிற்கின்றனர். பரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த வருடத்தை விட இந்த முறை அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு சில நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தையும் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வண்டிப்பெரியார், எருமேலி, பம்பை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்களில் முன்பதிவு செய்து தரிசனம் செய்கின்றனர். கடந்த 2 வாரங்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 9.50 லட்சத்தையும் தாண்டி விட்டது. இந்தநிலையில் நேற்று இரவு முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது பக்தர்கள் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. ஆகவே பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நெய்யபிஷேகம் செய்வதற்கும், அரவணை, அப்பம் பிரசாதம் வாங்குவதற்கும் நீண்ட வரிசையில் பக்தர்கள் நிற்பதை காண முடிகிறது. இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், நாளை முதல் வார விடுமுறை தினம் தொடங்குவதாலும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ் கவிழ்ந்து 15 பக்தர்கள் காயம்
திருத்தணியை சேர்ந்த 20 பக்தர்கள் ஒரு பஸ்சில் நேற்று சபரிமலைக்கு வந்து கொண்டு இருந்தனர். பாலக்காடு வடக்கஞ்சேரி அருகே இந்த பஸ் எதிர்பாராதவிதமாக சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் 15 பேர் காயமடைந்தனர். இவர்களில் 9 பேர் ஆலத்தூர் அரசு மருத்துவமனையிலும், 6 பேர் பாலக்காடு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் யாருடைய உடல்நிலையும் கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
The post சபரிமலையில் கூட்டம் அலைமோதல்; 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்: அரவணை, அப்பம் வாங்க நீண்ட வரிசை appeared first on Dinakaran.