திருவாரூர், நவ.29: திருவாரூரில் 52 ஆண்டு காலமாக இயங்கி வரும் ஆர்.எம்.எஸ் அஞ்சல் அலுவலகத்தினை தொடர்ந்து திருவாரூரிலேயே இயங்கிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நாகை எம்.பி செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஒன்றிய தகவல் தொடர்பு துறை அமைச்சர் சிந்தியாவை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருவாரூரில் இயங்கி வரும் ஆர்.எம்.எஸ் தபால் பிரிப்பக அலுவலகமானது கடந்த 1972ம் ஆண்டில் துவங்கப்பட்டு 52 ஆண்டு காலமாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தபால் பிரிப்பகத்தை இணைப்பு என்ற பெயரில் மயிலாடுதுறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய அலுவலகங்கள் இணைப்பு காரணமாக பொதுமக்கள் பாதிப்படைவார்கள். அதிகமான விரைவு தபால்கள் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு தொடர்புடையதாகும். கோடியக்கரை வரையிலான பெரும்பாலான அலுவலகங்கள் உள்ளடக்கிய இத்தகைய பாரம்பரியமான அலுவலகத்தை மக்கள் நலனை கருத்தில் கொண்டு திருவாரூரிலேயே இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறைக்கு மாற்றினால் தினந்தோறும் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான தபால்கள் தாமதமாக கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாலும், திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகம்,
நாகை மாவட்டத்தில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை கல்லூரி மற்றும் 2 மாவட்டங்களிலும் இயங்கி வரும் 2 மருத்துவக் கல்லூரிகள், கலெக்டர் அலுவலகங்கள், பல பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்திற்கும் கிடைக்க வேண்டிய துரித தபால் சேவை பாதிக்கப்படும் நிலையும் உள்ளதால் சொந்த கட்டிடத்தில் நகரின் மைய பகுதியில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தை திருவாரூரிலேயே தொடர்ந்து இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எம்.பி செல்வராஜ் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூரில் 52 காலமாக இயங்கும் ஆர்.எம்.எஸ் அஞ்சல் அலுவலகத்தை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் appeared first on Dinakaran.