ஆனால், நீலகிரி மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடனும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து, மோசமான வானிலை நிலவியதால் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு கோவையில் இருந்து கார் மூலம் மதியம் 12.30 மணிக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வந்தடைந்தார். அங்கு அவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் வெலிங்டன் ராணுவ மைய உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ராஜ்பவனில் அவர் தங்கினார்.
இன்று (28ம் தேதி) காரில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார். அங்கு பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார். 29ம் தேதி ஊட்டி ராஜ்பவனில் ஓய்வெடுக்கும் அவர், உள்ளூர் பழங்குடியின சமுதாய மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். 30ம் தேதி காலை 10.30 மணியளவில் ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் திருச்சி சென்று கார் மூலம் திருவாரூர் செல்கிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்கிறார்.
அன்று மாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டி – கோத்தகிரி – மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஏடிஜிபி (செயல்பாடுகள் பிரிவு) ஜெயராமன் தலைமையில் மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், நீலகிரி எஸ்பி நிஷா ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி ஊட்டி – கோத்தகிரி சாலை, கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஜனாதிபதி முர்மு 30ம் தேதி திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். பட்டமளிப்பு விழாவை முடித்து விட்டு, ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் மாலை வந்திறங்கி, அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று 35 நிமிடம் வரை ஜனாதிபதி சாமி தரிசனம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஜனாதிபதி வந்திறங்கும் விமான நிலையம், ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் யாத்ரி நிவாஷ் ஹெலிபேடு தளம் ஆகியவற்றை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை கமிஷனர்கள் சுக்லா, செல்வக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், ஜனாதிபதி ஸ்ரீரங்கம் கோயில் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
The post தமிழ்நாட்டில் 4 நாள் சுற்றுப்பயணம் ஜனாதிபதி முர்மு ஊட்டி வந்தார்: மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் பயணம் ரத்து; சாலை மார்க்கமாக ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றார் appeared first on Dinakaran.