பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலை அமைக்க 200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல்

சென்னை: பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலையை அமைக்க திருவள்ளூரில் 200 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாக்ஸ்கான் நிறுவனம் விரிவாக்கத்திற்காக ரூ.1,792 கோடி முதலீடு செய்து ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் ஐ-போன்களுடன், ஐ-பேட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தை பொருத்தவரை தன்னுடைய முதல் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் ஆலையை தைவான் நாட்டில் அமைத்து வருகிறது. இரண்டாவது ஆலையை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு இந்த நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்காக 200 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் ஆலை அமைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது: பேட்டரி ஆலையை அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் பாக்ஸ்கான் ஆலை அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வட சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலூர் என்ற இடத்தில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி ஸ்டோரேஜ் ஆலை நிறுவ அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இந்த ஆலைக்காக தமிழ்நாடு அரசு சார்பாக பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சில முக்கிய சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு இந்தியாவில் தங்களுடைய ஸ்மார்ட்போன் உற்பத்தியை விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இந் நிறுவனம் ஏற்கனவே பெரும்புதூர் பகுதியில் தங்களுடைய ஆலையை நிறுவி ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை தயாரித்து வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலை அமைக்க 200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: