சென்னை துறைமுக முன்னாள் அதிகாரி உட்பட 6 பேர் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ.27 லட்சம் பணம், ஆவணம் பறிமுதல்: சிபிஐ தகவல்

சென்னை: முன்னாள் சென்னை துறைமுக இணை இயக்குநர் உட்பட 6 பேர் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.27 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இணை இயக்குநராக புகழேந்தி பணியாற்றி வந்தார். அவர் பணிக்காலத்தில் குறிப்பாக 2019 மற்றும் 2020ம் ஆண்டு துறைமுகத்தில் கழிவு செய்யப்பட்ட 4 இழுவை கப்பல்கள் மற்றும் ‘அன்னம்’ என்ற எண்ணெய் மீட்பு கப்பல் டெண்டர் விடப்பட்டது. இணை இயக்குநராக இருந்த புகழேந்தி தனியார் நிறுவனம் ஒன்றிக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி டெண்டர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை துறைமுகம் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி புகாரின் அடிப்படையில் இணை இயக்குநர் புகழேந்தி டெண்டர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விட ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐயில் ஆவணங்களுடன் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சிபிஐ விசாரணை நடத்தினர். அப்போது இணை இயக்குநராக இருந்த புகழேந்தி சென்னை துறைமுகம் அறக்கட்டளை அதிகாரிகள் டெண்டர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்கி பிறப்பிக்கப்பட்டதாக போலியாக ஆவணம் உருவாக்கி சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு 4 இழுவை கப்பல் மற்றும் அன்னம் என்ற எண்ணெய் மீட்பு கப்பல் டெண்டர் விடப்பட்டது தெரியவந்தது. இதற்காக ரூ.70 லட்சம் பணத்தை சட்டவிரோதமாக அவருக்கு அளிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

அதை தொடர்ந்து சிபிஐ கடந்த மாதம் 25ம் தேதி முன்னாள் துறைமுகம் இணை இயக்குநர் புகழேந்தி டெண்டர் எடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த சண்முகம், தனியார் நிறுவனத்தின் மேலாளர் சேகர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக சென்னையில் உள்ள மயிலாப்பூரில் உள்ள முன்னாள் துறைமுகம் இணை இயக்குநர் புகழேந்தி வீடு, டெண்டர் எடுத்த திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் உள்ள சண்முகம் வீடு, தனியார் நிறுவனத்தின் மேலாளராக உள்ள ராயப்பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்த சேகர் என்பவர் வீடு மற்றும் தஞ்சை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.27 லட்சம் ரொக்கம், போலி ஆவணம் தயாரிக்க பயன்படுத்திய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் தொடர் விசாரணை நடந்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

The post சென்னை துறைமுக முன்னாள் அதிகாரி உட்பட 6 பேர் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ.27 லட்சம் பணம், ஆவணம் பறிமுதல்: சிபிஐ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: