ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை: டெல்டாவில் 52,500 ஏக்கர் சம்பா மூழ்கியது

* 2 லட்சம் மீனவர்கள் 2ம் நாளாக முடக்கம்
* மண்டபம் மீன்பிடி இறங்குதளம் கடலில் மூழ்கியது

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 52,500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. 2 லட்சம் மீனவர்கள் 2ம் நாளாக முடங்கினர். மண்டபம் மீன்பிடி இறங்குதளம் கடலில் மூழ்கியது. வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்றதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் (26ம்தேதி) தொடங்கிய கனமழை நேற்று 2ம் நாளாக விடாமல் பெய்து வருகிறது. டெல்டா பகுதிகளான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டிம் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை பொழிந்தது.

நேற்றும் மழை நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணைகளின் கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1500 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள், திருவாரூர் மாவட்டத்தில் 1000 ஏக்கரில் ஒரு மாதமான இளம் சம்பா பயிர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. கடல் சீற்றத்தால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2 லட்சம் மீனவர்கள் நேற்றும் கடலுக்கு செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் தெற்கு தெருவில் 150 ஆண்டு பழமையான வீட்டின் முன்பகுதி மழையால் இடிந்து விழுந்தது.

இதனால் மின்கம்பங்கள், சேதமடைந்ததுடன் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. அவ்வழியாக யாரும் செல்லாததால் உயிர்ச்சேதம் இல்லை. அந்த வீட்டின் அருகே வசித்த 3 குடும்பத்தினரையும் அதிகாரிகள் மாற்று இடத்தில் தங்க வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்: ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதிகளில் நேற்று தொடர்ந்து மிதமான மழை பெய்தது. காலை முதல் பலத்த சூறைக்காற்று வீசியதால் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக எழுந்தன. கடற்கரை ஓரங்களில் உள்ள தடுப்புகளில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதி சீறிப்பாய்ந்தன. ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் கடல் பெருக்கு சீற்றம் காரணமாக தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால் 50க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்டன.

பாம்பன் கடற்கரையையொட்டி உள்ள மீனவர்கள் குடியிருப்பு தெருக்களுக்குள் கடல் நீர் புகுந்தது. பாலத்தின் கீழே கடல்நீர் மட்டம் உயர்ந்து சீற்றம் ஏற்பட்டதால் பழைய ரயில் பாலத்தை எட்டும் அளவிற்கு கடல் அலைகள் எழுந்தன. தீவில் நேற்று பகல் முழுவதும் பனிமூட்டமான வானிலையுடன் சாரல் மழை பெய்தது. ராமேஸ்வரம் – பாம்பன் இடையே தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. மண்டபம் கடலோர பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மண்டபம் பகுதியில் இந்திய கடலோர காவல் படை நிலையம் அருகே உள்ள மீன்பிடி இறங்குதளம் கடல் நீர் மேவி மூழ்கியது. இக்கடல் பகுதியில் ஆழப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தி வந்த, பெரிய படகும் கடலில் மூழ்கியது. மீன்வளத்துறை எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற நம்புதாளையை சேர்ந்த 8 படகுகள், பாசிபட்டினத்தை சேர்ந்த 12 படகுகளின் உரிமையாளர்கள் மீது கடல் ஒழுங்கு முறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்: கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு முதலே பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலையிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் கடும் குளிர் நிலவி வருகிறது. சூறைக்காற்று காரணமாக நேற்று மாலையில் கொடைக்கானல் – பூம்பாறை மலைச்சாலையில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின் போக்குவரத்தை சீர்செய்தனர். கடலூர் மாவட்டம்: கடலூருக்கு ரெட் அலர்ட் காரணமாக அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டது. நேற்று காலை பரவலாக மாவட்டம் முழுவதும் லேசான சாரல் மழை பெய்த நிலையில் மதியத்துக்கு மேல் மழை குறைந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் கடற்கரை பகுதிகளில் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர் மழையால் 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளது 2 கால்நடைகள் இறந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டம்: ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று லேசான மழை மட்டுமே இருந்தது. மரக்காணத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, காணிமேடு- மண்டகப்பட்டு தற்காலிக தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு- விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் பாலம் என்பதால் கந்தாடு, மரக்காணம், மண்டகப்பட்டு, அகரம், அசப்பூர், சூனாம்மேடு, புதுப்பேட்டை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் 3500 ஏக்கர் உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

கடல்நீர் புகுந்து உப்பளங்கள் கடல்போல் காட்சியளிக்கிறது.
தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் ஜடாக் மரக்காணம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் பெங்கால் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. புதுவை கடற்கரை மற்றும் பாண்டி மெரினா கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு மற்றும் திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.

படகு கவிழ்ந்தது 6 மீனவர்கள் உயிர்தப்பினர்
கடலூர் அருகே தைக்கால் தோணித்துறை பகுதியை சேர்ந்த மணிக்கண்ணன்(35), தமிழ்(37), சாமிதுரை(63), மணிமாறன்(30), தினேஷ்(29), சற்குணன்(23) ஆகிய 6 மீனவர்கள் மீன்வளத்துறை எச்சரிக்கையை மீறி நேற்று அதிகாலை 2 நாட்டு படகுகளில் பரவனாறு நோக்கி மீன் பிடிக்க சென்றுள்ளனர். சித்திரைப்பேட்டை கடல் பகுதியில் அலைகளின் சீற்றத்தால் ஒரு படகு கவிழ்ந்துள்ளது. அதில் இருந்த 3 மீனவர்களும் நீந்தி மற்றொரு படகில் ஏறி உள்ளனர். பின்னர் அவர்கள் தனியார் நிறுவன கப்பல் அணையும் தளத்திற்கு சென்றனர். அங்கு 6 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர். கடல் அலை சீற்றம் குறைந்த பிறகு அந்த 6 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை: டெல்டாவில் 52,500 ஏக்கர் சம்பா மூழ்கியது appeared first on Dinakaran.

Related Stories: