கும்பகோணம், நவ. 27: கும்பகோணம் சங்கரநாயகி அம்மன் சமேத சோமேஸ்வர பெருமான் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கும்பகோணம் வட்டம், மூப்பக்கோயில் பாபுகுளம் தென்கரையில் அமைந்துள்ள சங்கரநாயகி அம்மன் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்று மாலை சங்கர நாயகி அம்பாளுக்கும், சோமேஸ்வரர் பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க மாலை மாற்றும் நிகழ்வும், தொடர்ந்து கங்கணம் கட்டுதல், பூணுல் அணிவித்தல், நலுங்கு வைத்தல், பட்டு வஸ்திரங்கள் சமர்பித்தல், சீர்வரிசை தட்டுக்கள் சமர்பித்தல் ஆகியவை நடைபெற்ற பின்னர், புனித நீர் கடத்தை ஸ்தாபித்து, சிவச்சாரியார்கள் ஹோமம் வளர்த்து, வேத மந்திரங்கள் ஜபித்து, சங்கரநாயகி அம்பாள் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்ட, சோமேஸ்வரர் பெருமான் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு, சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. விழாவை சங்கரநாயகி அம்மன் இறைபணிக்குழுவினர் மற்றும் தெருவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
The post கும்பகோணம் சங்கரநாயகி அம்மன் சமேத சோமேஸ்வர பெருமான் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம் appeared first on Dinakaran.