பாடாலூர், நவ. 27: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் செட்டிகுளம் கிராமம் உள்ளது. பாடாலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதுதவிர தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதுமட்டுமின்றி செட்டிகுளம் கடைவீதியில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில் மற்றும் மகா குபேரனுக்கு தனி கோயில்கள் உள்ளது. இந்த கோயிலுக்கும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர செட்டிகுளம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், உதவி மின் பொறியாளர் அலுவலகம், பள்ளிக்கூடங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம் உள்ளது.
மேலும் நாட்டார்மங்கலம், செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள், கிரஷர்கள் அதிகம் செயல்படுகிறது. இரவு நேரத்தில் இந்தப் பகுதியில் சட்டத்துக்கு புறமாக டிப்பர் லாரி மூலம் கிராவல் திருட்டும் நடந்து வருகிறது. இதனால் கனிம வளம் மற்றும் இயற்கை வளம் களவாடப்படுகிறது. பாடாலூர் போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் செட்டிகுளம் கிராமம் அமைந்துள்ளது. எனவே இந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கை காக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும், கனிம வளத்தை பாதுகாக்கும் வகையிலும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் செட்டிகுளம் பஸ் நிறுத்தம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் செல்லும் சாலையில் தெற்கு புறத்தில் காலியாக உள்ள இடத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post களவாடப்படும் கனிம வளம் செட்டிகுளத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.