வாக்காளர் பட்டியலில் திருத்தம் இருந்தால் வார்டு குழு அலுவலக உதவி கமிஷனரிடம் தெரிவிக்கலாம்

திருச்சி, நவ.27: சலையோர வியாபாரிகள் குறித்த திருந்திய பட்டியலின்படி அறிவிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியலில் திருத்தம், பிழை அல்லது நீக்கம் உள்ளிட்டவை இருந்தால் வியாபாரிகள் அந்தந்த வார்டு குழு உதவி கமிஷனரிடம், குறித்த காலத்துக்குள் தெரிவிக்கலாம் என மாநகர கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகளின் அவசியம் கருதி, சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, 5 ஆயிரத்து 231 வியாபாரிகள் பட்டியலிடப்பட்டனர். இதில் சில வியாபாரிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளதால், கூடுதல் கணக்கெடுப்பு தேவை என சாலையோர வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கண்டறியும் பொருட்டு, வியாபாரிகள், வியாபாரம் செய்யும் இடத்திற்கே சென்று கூடுதல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 989 சாலையோர வியாபாரிகள் மேலும் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பின் வாயிலாக சேர்க்கப்பட்ட 6 ஆயிரத்து 220 சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் விவரங்கள் வார்டு குழு அலுவலக வாரியாக அனைத்து சாலையோர வியாபாரிகளும் பார்வையிட வசதியாக மாநகராட்சியின் அனைத்து வார்டுகுழு அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தம், பிழை அல்லது நீக்கம் செய்ய விரும்பும் வியாபாரிகள் நவ.30ம் தேதி டி.16ம் தேதி வரை அந்தந்த வார்டு குழு அலுவலக உதவி கமிஷனரிடம் உரிய சான்று மற்றும் ஆவணங்ளுடன் விண்ணப்பிக்கும்படி மாநகர கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார்.

The post வாக்காளர் பட்டியலில் திருத்தம் இருந்தால் வார்டு குழு அலுவலக உதவி கமிஷனரிடம் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: