மலை உச்சியில் தங்கப்புதையல்? நள்ளிரவில் மர்மநபர்கள் சிறப்பு பூஜை குடியாத்தம் அருகே மக்கள் அச்சம்

குடியாத்தம், நவ. 27: குடியாத்தம் அருகே மலை உச்சியில் தங்கப்புதையல் இருப்பதாகவும் அதனை எடுக்க மர்ம நபர்கள் சிலர் சிறப்பு பூஜைகள் செய்வதாகவும் கூறி கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மூலக்கொல்லி கிராமத்தையொட்டி மலை உள்ளது. இந்த மலையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அரசர்கள் தங்கியிருந்ததாகவும், அவர்கள் மலை உச்சியில் தங்க புதையல் வைத்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனை அமானுஷ்ய சக்திகள் தற்போது பாதுகாப்பதாகவும், இதற்கு சிறப்பு பூஜை செய்தால் புதையலை வெளிக்கொண்டு வரலாம் என்றும் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன்பேரில் சிலர் அங்கு சென்று நள்ளிரவில் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். குறிப்பாக தங்கப்புதையலை பாதுகாத்து வரும் அமானுஷ்ய சக்தியை விரட்டியடிக்க பயங்கர வெடிகளை வெடித்து வருகின்றனர். இதனால் நள்ளிரவில் மலை உச்சியில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து குடியாத்தம் வருவாய் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மலை உச்சியில் தங்கப்புதையல்? நள்ளிரவில் மர்மநபர்கள் சிறப்பு பூஜை குடியாத்தம் அருகே மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: