கூட்டுறவு சங்கங்களின் பட்டியலில் இருந்து போலி உறுப்பினர்கள் 44 லட்சம் பேர் நீக்கம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

* அதிகபட்சமாக தஞ்சாவூரில் 3.23 லட்சம்

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை அரசு செய்து வருகிறது. முதல்கட்டமாக தரவுகளின் அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் இருந்த 44 லட்சம் போலி உறுப்பினர்களை அதிகாரிகள் அதிரடியாக நீக்கம் செய்துள்ளனர். பெயர் நீக்கப்பட்டவர்களில் 18 லட்சம் பேர் இறந்தவர்கள் என்ற பிரிவின் கீழும், மற்றவர்கள் தகுதியற்ற உறுப்பினர்கள் என பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த தரவுகளை திரட்டுவதற்கான பயிற்சி 2 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. மேலும், நீக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் ஆதார் எண்ணை சங்கங்களில் இணைக்காமல் இருந்துள்ளனர். அவர்கள் தங்களின் ஆதார் விவரங்களை அளிக்கும்பட்சத்தில் அவர்களை இணைக்க பரிசீலனை செய்யப்படும் என தகவல்வெளியாகி உள்ளன.

சமீபத்தில் இந்த தேர்தல் விவகாரம் குறித்து நிருபர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், ‘‘அ.தி.மு.க ஆட்சியின் போது 26 மாவட்டங்களில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இது சிக்கல்களை உருவாக்கியதால், அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த அரசு முடிவு செய்தது. ஆனால், சில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளின் பதவிக்காலம் இன்னும் முடிவடையவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், பல போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். எனவே, அத்தகைய 40 லட்சம் உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். அனைத்து உறுப்பினர்களும் தங்கள் உறுப்பினர்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் அதை இணைத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்படும்’’ என்றார். பொதுவாக, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதிவாளரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு 7,200 பேர் கொண்ட அமைப்புகள் விவசாயிகள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு கடன் வழங்குகிறது. இந்த சங்கங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் 34,600 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கூட்டுறவு சங்கங்களில் 1.46 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 22,110 மாநில அளவிலான சங்கங்களும், 140 பல வகையான மாநில சங்கங்களும் உள்ளன. அதேபோல், 14 துறைகளின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் அதிகம்
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் அதிகபட்ச உறுப்பினர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ளனர். அதன்படி, 10.8 லட்சம் பேரும், இரண்டாவதாக திண்டுக்கல் 7.12 லட்சம் உறுப்பினர்களும், கடலூரில் 6.66 லட்சம் உறுப்பினர்களும், திருச்சியில் 5.92 லட்சம் உறுப்பினர்களும் இறுதியாக கன்னியாகுமரியில் 5.68 லட்சம் உறுப்பினர்களும் உள்ளனர்.

The post கூட்டுறவு சங்கங்களின் பட்டியலில் இருந்து போலி உறுப்பினர்கள் 44 லட்சம் பேர் நீக்கம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: