கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிபுத்தூர் கிராமத்தில் 3 குழுக்களாக 100 நாள் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் காலனி பகுதியில் நடைபெறும் பணிகளை காங்கிரஸ் பிரமுகரான ஜோதிசுதாகர் என்பவர் பார்வையிடுவதாகக் கூறி அங்கு சென்றுள்ளார். அப்போது மழையின்போது குடை பிடிக்கக் கூடாது, கைக்குழந்தைகளுக்கு பாலூட்ட தனியாக நேரம் ஒதுக்க கூடாது, மாற்றுத்திறனாளிகள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் எனக் கூறிய காங்கிரஸ் நிர்வாகி தனக்கு கலெக்டருக்கு நிகரான அதிகாரம் இருப்பதாகவும், இதை எதிர்த்து கேட்பவர்கள் மீது பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட 100 நாள் பணியாளர்கள் நேற்று கரடிபுத்தூர் – பாலவாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தடம் எண் 92 என்ற ஊத்துக்கோட்டை வரை செல்லும் அரசுப் பேருந்தை அவர்கள் சிறை பிடித்தனர். ஜோதி சுதாகரை கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
The post கும்மிடிப்பூண்டி அருகே பேருந்தை சிறைபிடித்து மறியல் appeared first on Dinakaran.