புழல்: செங்குன்றம் அருகே வங்கி கடனால் 3 குடும்பங்களை வெளியேற்றி வீடுகளுக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர், 4வது தெருவில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தமிழரசி என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி வீட்டில் குணசேகரன், அசோக், யாமினிதேவி உள்ளிட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தலா ரூ.8 லட்சம் கொடுத்து ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், தமிழரசியின் வீட்டு பத்திரத்தில் அவரது கையெழுத்தில்லாமல், வேறு ஒருவரின் கையெழுத்திட்டு ஜோதி, ஆனந்தன், சீனிவாசன் தரப்பினர் வங்கி கடன் ரூ.50 லட்சம் வாங்கியுள்ளனர். முறையாக வங்கி கடன் செலுத்தாததால், வங்கி அதிகாரிகள் அவரது வீட்டை வேறு ஒருவருக்கு ரூ.46 லட்ச ரூபாய் ஏலத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக நீதிமன்ற உத்தரவு மூலம் சென்னை எழும்பூர் கிளை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் மற்றும் செங்குன்றம் போலீசார் பாதுகாப்புடன் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் நேற்று வீட்டுக்கு சீல் வைக்க வந்தார். அப்போது கனமழை பெய்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் அந்த வீட்டில் வசித்துவந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 22 பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வீட்டிற்கு சீல் வைத்தனர்.
இதனால் அவர்கள் வட்டாட்சியர் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், வாடகைதாரர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கனமழை நேரத்தில் குழந்தைகளுடன் நாங்கள் எங்கே செல்வோம் என்றும், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தங்களுக்கு உரிய அவகாசம் அளிக்காமல் மனித உரிமைகளை மீறும் வகையில், தமிழரசியிடம் ரூ.24 லட்சத்தைக்கூட பெற முடியாத வகையில் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி சீல் வைத்துள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். மேலும் வீட்டின் உரிமையாளர் தமிழரசி 3 மாதம் அவகாசம் வழங்கிய நிலையில், தங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல் வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
The post வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்: செங்குன்றம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.