எல்லாபுரம் ஊராட்சியில் வானவில் பாலின வள மையம் திறப்பு

பெரியபாளையம்: எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வானவில் மையம் பாலின வள மையத்தினை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் திறந்து வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் செல்வராணி வழிகாட்டுதலின்படி “வானவில் மையம் பாலின வள மையம்’’ தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. எல்லாபுரம் வட்டார இயக்க மேலாளர் அபிராமி தலைமை தாங்கினார். எல்லாபுரம் ஒன்றிய வேளாண்மை துறை அதிகாரி சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் கலந்துகொண்டு, வானவில் மையம் பாலின வள மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த வானவில் மையம் பாலின வள மையத்தின் மூலம் குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இம்மையத்தில் ஒரு மேலாளர் தலைமையில் ஊழியர்கள் பணியாற்றுவார்கள். அவர்கள், 53 ஊராட்சிகளில் உள்ள பெண்களின் பிரச்னைக்கு ஏற்றார்போல் ஆலோசனைகளை வழங்குவர். இந்நிகழ்வில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உமாவதி, அமுதவல்லி, வனிதா, மாலா, விஜயராணி, விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஏ.நாகராஜ் நன்றி கூறினார்.

The post எல்லாபுரம் ஊராட்சியில் வானவில் பாலின வள மையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: