நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் “ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம்..!!

சென்னை: நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் “ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 22.10.2024 அன்று வெளியிடப்பட்ட அரசு ஆணை எண் – G.O.Ms.No.151-இன் படி நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தை ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்வதை அறிவிப்பதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையம் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-1-ல் நீல வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.

இந்திய இராணுவத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக, நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் (Officers Training Academy – OTA) முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான உயர்தரக் குழுவின் (High-Power Committee HPC) 26-வது கூட்டத்தில் இராணுவ அதிகாரிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் அதன் பரிசீலனைகள் மற்றும் பரிந்துரைகளுக்காகவும், குறிப்பாக இந்திய இராணுவத்தின் தென் பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், AVSM, அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

பெயர் மாற்றம் விழா இன்று (25.11.2024) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் தக்ஷின் பாரத் பகுதியின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங், லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், AVSM, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பயிற்சி அகாடமி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ ஜே பெர்னாண்டஸ் AVSM, VSM, துணை கமாண்டன்ட் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மேஜர் ஜெனரல் அஜய் சுத், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் (OTA) உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

The post நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் “ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: