நீட் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது: சபாநாயகர் அப்பாவு காட்டம்

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு என்பது தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது என சபாநாயகர் அப்பாவு காட்டமாக கூறினார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.

மேலும், ரோட்டரி மாவட்ட தலைவர் மகாவீர் போத்ரா, அரசு யோகோ இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், நேச்சுரோபதி என்பதை குறிக்கும் வண்ணம் ‘என்’ என்ற ஆங்கில சொல்லை 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதன்பின்னர் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழ்நாடுதான் முதலிடம் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி கொடுத்துள்ளார். தற்போது மருத்து படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு தேவையில்லை என்பது அனைவரது கருத்தாகவும் உள்ளது. நீட் தேர்வை தேசிய முகமை நடத்துகிறது என வைத்து கொண்டாலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடிய தேர்வாக நீட் தேர்வு உள்ளது.

12ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அவர்களது மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் கொடுத்தால்தான் நியாயமாக இருக்கும். நீட் பயிற்சி பெற பல லட்சம் செலவு செய்கின்றனர். இந்த கட்டமைப்பு மாறும் வரை, வசதி இல்லாத ஏழைப் பிள்ளைகளுக்கும் அரசே பயிற்சி அளிக்க வேண்டி இருக்கிறது.

The post நீட் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது: சபாநாயகர் அப்பாவு காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: