பொங்கலன்று நடைபெறும் சிஏ தேர்வை மாற்றுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்

மதுரை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதியும், உழவர் திருநாள் 16ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய நாளில் பட்டய கணக்காளர் பணிக்கான தேர்வுகளில் வணிக சட்டங்கள் (பிசினஸ் லாஸ்) மற்றும் தகுதித் திறன் தேர்வு (குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூடு) ஆகியவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை, துர்கா பூஜை, தீபாவளியை போல் தமிழகத்தில் அறுவடைத் திருநாளான பொங்கல் திருவிழா தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழாவாக மக்களால் கொண்டாடப்படுகிறது. எனவே, தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

* ‘திருந்தப் போவதில்லை’
சு.வெங்கடேசன் தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘‘பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு’’ என்று பதிவிட்டுள்ளார்.

The post பொங்கலன்று நடைபெறும் சிஏ தேர்வை மாற்றுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: