துண்டு பீடி எடுத்ததை கண்டித்ததால் சுவரில் தலையை மோதி பிச்சைக்காரர் கொலை: சாந்தோம் அருகே பரபரப்பு, சக பிச்சைக்காரர் கைது

சென்னை: சாந்தோம் பகுதியில் பையில் வைத்திருந்த துண்டு பீடியை எடுத்ததை கண்டித்ததால் பிச்சைக்காரரை தலையை பிடித்து சுவரில் மோதி படுகொலை செய்த சக பிச்சைக்காரரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சுகு (62). மாற்றுத்திறனாளியான இவர், சாந்தோம் தேவாலயம் முன்பு அமர்ந்து பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து, அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார். வழக்கமாக இரவு நேரத்தில் சாந்தோம் அருகே உள்ள நடைபாதையில் 50க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களுடன் சுகுவும் தங்கி வந்தார்.

இவருக்கு, வேளச்சேரியை சேர்ந்த ஆனந்த் (42) என்ற சக பிச்சைக்காரர் அவ்வப்போது சில உதவிகளை செய்து வந்துள்ளார். சில நேரங்களில் ஆனந்த், திருமண மண்டபங்களில் பாத்திரம் கழுவும் வேலை செய்து கொண்டே, பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் சுகு தலையில் படுகாயங்களுடன் சாந்தோம் அருகே மயங்கி கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். மேலும், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் இறந்துள்ளதாக டாக்டர்கள் பிரேத பரிசோதனை அறிக்கை அளித்தனர். அதன்படி மயிலாப்பூர் போலீசார் சுகு காயங்களுடன் கிடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்திய போது, சுகுவை சக பிச்சைக்காரர் ஆனந்த் அடித்து காயப்படுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் ஆனந்தை நேற்று முன்தினம் வேளச்சேரியில் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சுகு மாற்றுத்திறனாளி என்பதால் அனைத்து உதவிகளும் நான் தான் செய்து வந்தேன். ஆனால் சம்பவத்தன்று அவரது பையில் இருந்து அவர் படித்து மீதம் வைத்திருந்த துண்டு பீடியை எடுத்ததற்கு, என்னை கத்தியால் குத்தி காயப்படுத்தினார். இதனால் ஆத்திரத்தில் நான் அவரை தாக்கி, அவரது தலையை பிடித்து சுவரில் மோதிவிட்டு சென்றது தெரியவந்தது. பின்னர், ஆனந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post துண்டு பீடி எடுத்ததை கண்டித்ததால் சுவரில் தலையை மோதி பிச்சைக்காரர் கொலை: சாந்தோம் அருகே பரபரப்பு, சக பிச்சைக்காரர் கைது appeared first on Dinakaran.

Related Stories: