ஏலச்சீட்டில் ஊரையே ஏமாற்றிய குடும்பம்: பெண் உள்பட 4 பேர் கைது

ஊட்டி: ஊட்டியில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி கீழ் தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்தவர் குமார் (51). இவரும், இவரது மனைவி லதா (46), மகன் ராகுல் (23), குமாரின் தம்பியான ஆட்டோ டிரைவர் சகாதேவன் (48) ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். ஏலச்சீட்டு நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை. ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் பணிகளை குமாரின் மனைவி மற்றும் மகன் செய்து வந்துள்ளனர்.

கடைசியாக 50 பேர் அடங்கிய ரூ.1.50 லட்சம், 25 பேர் அடங்கிய ரூ.1.35 லட்சம், மற்றும் 35 பேர் அடங்கிய ரூ.1.05 லட்சம் ஏலச்சீட்டு நடத்தியுள்ளனர். ஆனால் ஏலச்சீட்டு முடிந்த பின்னரும், பணம் கொடுத்தவர்களுக்கு இவர்கள் முறையாக பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் பணம் கட்டி ஏமாந்த லாரி டிரைவர் மோகன்குமார் உள்ளிட்ட பலரும் ஊட்டியில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். பண மோசடி புகார் என்பதால் இப்புகார் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் 20 பேர் கொடுத்த புகாரில் ரூ.36 லட்சத்து 55 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குமார், அவரது மனைவி, மகன் மற்றும் தம்பி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஏலச்சீட்டில் ஊரையே ஏமாற்றிய குடும்பம்: பெண் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: