ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் மாங்காடு மதனந்தபுரம் பகுதியை சேர்ந்த கவுசல்யா(51) என்பவர் அக்டோபர் 22ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது: எனது கணவர் சுப்பிரமணியின் நண்பர் கோவிந்தராஜ் என்பவர் நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் வேலை செய்து வருவதாகவும், தனக்கு கல்வித்துறையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் நன்கு தெரியும் என கூறினார். அதனை நம்பி எனது கணவரின் நண்பரான சாதிக்கின் மகள் ஆயிஷா என்பவருக்கு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தரும்படி கூறி ரூ.15 லட்சத்தை கோவிந்தராஜிடம் கொடுத்தோம். அதுமட்டுமில்லாமல், ஆயிஷாவின் நண்பர்களான ஆயிஷாசித்திகா, உதய், நுரையின், சையத் ஆகியோர்களும் தலா ரூ.15 லட்சம் விதம் வங்கி பரிவர்த்தணை மூலமாக மொத்தம் ரூ.85.44 லட்சத்தை கோவிந்தராஜின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால் அவர் சொன்னபடி எம்பிபிஎஸ் சீட்டு வாங்கித் தரவில்லை. அதனால் கொடுத்த பணத்தை கோவிந்தராஜிடம் திருப்பிக்கேட்ட போது பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் ஆல்பி பிரிஜிட் மேரி விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த கடலூர், பள்ளிப்படை, ஜி.என் நகரை சேர்ந்த கோவிந்தராஜ்(42) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
The post மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டு வாங்கித் தருவதாக ரூ.85 லட்சம் ஏமாற்றியவர் கைது appeared first on Dinakaran.