சென்னை: சென்னையில் முதல் முறையாக நடைபெறும் சர்வதேச அளவிலான கூடைப்பந்து ஆட்டங்களில் இ்ந்திய அணி நவ.22, 25ம் தேதிகளில் முறையே கத்தார், கஜகஸ்தான் அணிகளுடன் மோத உள்ளது. ஃபிபா ஆசிய கோப்பை ஆண்கள் கூடைப்பந்து போட்டி வரும் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. அந்தப்போட்டியில் பங்கேற்கும் நாடுகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள், 24 ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இ பிரிவில் உள்ள இந்தியா விளையாடும் தகுதிச் சுற்று ஆட்டங்கள் சென்னையில் நடைபெற உள்ளன. அதன்படி நேரு உள் விளையாட்டு அரங்கில் நவ.22ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் கத்தார் அணியையும், நவ.25ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் கஜகஸ்தான் அணியையும் இந்தியா எதிர் கொள்ள உள்ளது.
வழக்கமாக சர்வதேச கூடைப்பந்து ஆட்டங்கள் பெங்களூரு உள்ளிட்ட இதர இந்திய நகரங்களில் நடைபெறுவதுதான் வாடிக்கை. இந்த முறை வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டின் சென்னையில் இரண்டு சர்வதேச கூடைப்பந்து ஆட்டங்கள் நடைபெற உள்ளது, புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு(ஃபிபா), இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு (பிஃஎப்ஐ) ஆகியவை இணைந்து இந்த ஆட்டங்களை நடத்த உள்ளன. இது குறித்து சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட்டமைப்பு தலைவர் ஆதவ் அர்ஜூனா, தலைமை பயிற்சியாளர் ஸ்காட் வில்லியம் ஃபிளமிங் ஆகியோர் கூறியதாவது: இந்தியாவில் கூடைப்பந்து விளையாட்டை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இளைய வயதினரை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான சர்வதேச தரத்திலான பயிற்சி மற்றும் தரமான கல்வி ஆகியவை இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இப்போது இந்தியா சர்வதேச கூடைப்பந்து தரவரிசையில் 86வது இடத்தில் இருக்கிறது. அதை மேலும் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் சர்வதேச பயிற்சியாளரை நியமித்துள்ளோம். இப்பொழுது கத்தார் மற்றும் கஜகஸ்தான் நாடுகளுக்கு எதிரான ஆசிய கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் இந்தியா விளையாட உள்ளது. சென்னையில் ஆண்களுக்கான சர்வதேச கூடைப்பந்து போட்டி இப்போதுதான் முதல் முறையாக நடக்கிறது.
இந்திய அணியை மொயன் பேக் ஹபீஸ் வழி நடத்துவார். மேலும் பாலதனேஷ்வர் பொய்யாமொழி, அரவிந்த் குமார் முத்துகிருஷ்ணன் என தமிழ் நாடு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். போட்டியை காண அனைவருக்கும் அனுமதி இலவசம். ஐபிஎல் போட்டியை போன்று கூடைப் பந்து விளையாட்டுக்காக தனி லீக் போட்டியை அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நடத்த இருக்கிறோம் அதன் மூலம் வீரர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான வருவாய் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சென்னையில் முதல் முறையாக சர்வதேச கூடைப்பந்து போட்டி: கத்தார், கஜகஸ்தான் அணிகளுடன் மோதும் இந்தியா appeared first on Dinakaran.