வறுமை, பட்டினி, பருவநிலை குறித்து ஆலோசனை பிரேசிலில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்

ரியோ டி ஜெனிரோ: நைஜீரியாவைத் தொடர்ந்து பிரேசில் சென்ற பிரதமர் மோடி, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இம்மாநாட்டில் உலகளாவிய வறுமை, பட்டினி, பருவநிலை சவால்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து நேற்று பிரேசில் நாட்டை சென்றடைந்தார். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சி மாநாடு நேற்றும் இன்றும் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இம்முறை மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், உலகளாவிய வறுமை, பட்டினி, பருவகால சவால்கள் ஆகியவை ஜி20 மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விவகாரங்கள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் மாநாட்டில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேச உள்ளார். மத்திய கிழக்கிலும், ரஷ்யா-உக்ரைன் இடையேயும் போர் நடந்து வரும் நிலையிலும், அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் பதவியேற்க உள்ள சூழலிலும் ஜி20 நாடுகள் கூடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

* மோடி-பைடன் சந்திப்பு
ஜி20 மாநாட்டில் நேற்று கலந்து கொள்ள வந்த போது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி வரவேற்றனர். பின்னர் சிறிது நேரம் உரையாடினர். இதுதொடர்பான புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை. மோடி, பைடன் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடப்படுவது குறித்தும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு பைடனை மோடி சந்தித்தது இதுவே முதல் முறை.

The post வறுமை, பட்டினி, பருவநிலை குறித்து ஆலோசனை பிரேசிலில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார் appeared first on Dinakaran.

Related Stories: