பாட்டில் வீசிய ரசிகர்கள் மெஸ்சியிடம் மன்னிப்பு கேட்ட பராகுவே கால்பந்து வீரர்

அசன்சியான்: உலகப் புகழ் பெற்ற கால் பந்து வீரர் லியோனல் மெஸ்சி மீது தண்ணீர் பாட்டில்களை தன் நாட்டு ரசிகர்கள் வீசியதற்கு, பராகுவே வீரர் ஒமர் அல்டெரேட் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 15ம் தேதி, பராகுவே நாட்டின் அசன்சியான் நகரில் நடந்த கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா – பராகுவே அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் முதல் பாதியின்போது, அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்சி, பிரேசிலை சேர்ந்த நடுவர் ஆண்டர்சன் டரோன்காவுடன் அவரது தீர்ப்பு குறித்து பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போட்டியின் 32வது நிமிடத்தில் பராகுவே வீரர் ஒமர் அல்டரெட்டுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மெஸ்சி மீது அவர் மோதித் தள்ளினார்.

அதை கண்டு கொள்ளாத நடுவர், இரண்டாவது முறை, மஞ்சள் அட்டை காண்பிக்க மறுத்தார். இதை கடுமையாக ஆட்சேபித்த மெஸ்சி, கை விரலை காண்பித்து வாக்குவாதம் செய்தார். இதுபோன்று அடுத்தடுத்து உரசல்கள் நிகழ்ந்தன. ஒரு சமயத்தில் பராகுவே ரசிகர்கள், மெஸ்சி மீது தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்ததால் பதற்றம் நிலவியது. அதன் பின் பாதுகாவலர்கள் தலையிட்டு அமைதி ஏற்படுத்தினர். இந்நிலையில், பராகுவே ரசிகர்களின் செயலுக்கு, இன்ஸ்டாகிராம் சமூக தளத்தில் பராகுவே வீரர் ஒமர் மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளார். அதில், ‘அன்பார்ந்த லியோ மெஸ்சி, உங்கள் மீது ரசிகர்கள் பாட்டில் வீசியதற்கு, பராகுவே சார்பில் மன்னிப்பு கோருகிறேன். உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் கனவு நாயகன் நீங்கள்’ என அவர் கூறியுள்ளார்.

The post பாட்டில் வீசிய ரசிகர்கள் மெஸ்சியிடம் மன்னிப்பு கேட்ட பராகுவே கால்பந்து வீரர் appeared first on Dinakaran.

Related Stories: