நெய்வேலி, நவ. 17: நெய்வேலி அடுத்த மேலக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மனைவி கமலம்(60). இவர் வீட்டில் இருந்தபோது, புவனகிரி அடுத்த பின்னலூர் கரைமேட்டு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(39) என்பவர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி அசிங்கமாக திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பிரகாஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். பிரகாஷ் மீது சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. மேலும் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி, ஆயுத வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகளும், சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கஞ்சா வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளும்,
குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ஒரு கொள்ளை முயற்சி வழக்கும், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் ஒரு கொள்ளை முயற்சி வழக்கும், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும் என மொத்தம் 10 வழக்குகள் உள்ளன. இவரின் தொடர் குற்றசெயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்படி, பிரகாஷ் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டார்.
The post வீடு புகுந்து பெண்ணுக்கு மிரட்டல் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது appeared first on Dinakaran.