உளுந்தூர்பேட்டை, நவ. 16: டெல்லியில் இருந்து இரும்பு பிளேட் பட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்சிங்(45) என்பவர் ஒட்டிச் சென்றார். இந்த லாரி நேற்று உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை விருத்தாசலம் ரோடு மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மாற்று பாதையில் சென்றதால் டிரைவர் ராஜேஷ்சிங் திடீரென பிரேக் அடித்து லாரியை பின்னால் இயக்கியுள்ளார். அப்போது அந்த வழியாக மேற்கு வங்கத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற மற்றொரு லாரி பின்னோக்கி வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் புதுக்கோட்டை நோக்கி சென்ற லாரியின் முன் பகுதி முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தவுடன், லாரியின் ஒரு பகுதியில் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் நசுங்கி அதிலிருந்து காஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக லாரியிலிருந்து டிரைவர் முருகவேல் அங்கிருந்து இறங்கி ஓடியதை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் வாகன ஓட்டுனர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர், காஸ் கசிவு ஏற்பட்ட சிலிண்டரை தண்ணீரை பீய்ச்சி அடித்து பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். இதனால் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post லாரிகள் மோதி விபத்து காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.