இலவச மனைப்பட்டா கேட்டு சட்டசபையை முற்றுகையிட்ட நரிக்குறவ மக்கள்

புதுச்சேரி, நவ. 15: இலவச மனைப்பட்டா கேட்டு நரிக்குறவ சமுதாய மக்கள் சட்டசபையை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சரியான இருப்பிட வசதி இல்லாத காரணத்தால் மழை, வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தங்களுக்கு அரசு சார்பில் மனைப்பட்டா வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு அமைச்சர் நமச்சிவாயம் சம்பத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நில அளவைகள் பதிவேடுகள் துறைக்கு பரிந்துரை செய்திருந்தார்.

ஆனால், அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று பழங்குடியினர் விடுதலை இயக்கம் மாநில செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் கோரிக்கை மனுக்களுடன் சட்ட சபைக்கு வந்த நரிக்குறவ மக்கள், முதல்வரை சந்திக்க சட்டமன்றத்திற்குள் திடீரென நுழைய முயன்றனர். அவர்களை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.இதனால் சபை காவலர்களுக்கும் நரிக்குறவ மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து முதல்வர், இன்னும் அலுவலகம் வரவில்லை. அவர் வந்தவுடன் குறிப்பிட்ட சிலரை உள்ளே செல்ல அனுமதிப்பதாக கூறியதையடுத்து, சட்டசபையை முற்றுகையிட்ட மக்கள் சபைக்கு வெளியே காத்திருந்தனர். பின்னர் இதனை தொடர்ந்து நரிக்குறவர் இன மக்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இலவச மனைப்பட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post இலவச மனைப்பட்டா கேட்டு சட்டசபையை முற்றுகையிட்ட நரிக்குறவ மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: