தந்திரிகளான கண்டரர் ராஜீவரர், பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார். அதன் பின்னர் பக்தர்கள் நெய் தேங்காய்களை எரிக்கும் ஆழியில் மேல்சாந்தி தீ மூட்டினார். தொடர்ந்து புதிய மேல் சாந்திகளான அருண்குமார் நம்பூதிரி, வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீகோயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் தந்திரி கண்டரர் ராஜீவரர் இருவருக்கும் புனித நீர் தெளித்து ஐயப்பனின் மூல மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார்.
இன்று முதல் புதிய மேல்சாந்திகளான இவர்கள்தான் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களின் நடை திறந்து முக்கிய பூஜைகளை நடத்துவார்கள். வழக்கமாக சபரிமலையில் முதல் நாளில் மாலை 5 மணிக்குத் தான் நடை திறக்கப்படும். ஆனால் நேற்று 35 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்ததால் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக 1 மணி நேரம் முன்னதாக 4 மணிக்கே நடை திறக்கப்பட்டது.
நடைதிறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட மாநிலங்களிலிருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இவர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் நேற்று மதியம் வரை தங்க வைக்கப்பட்டனர். நேற்று மதியம் 1 மணிக்குப் பின்னர் தான் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து பூஜைகள் தொடங்கும். கணபதி ஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட பூஜைகளுக்குப் பின்னர் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். மதியம் 1 மணி முதல் 3 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே நடை சாத்தப்பட்டிருக்கும்.
* பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் தயார்
மண்டல காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் நேற்று சபரிமலை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியது: இவ்வருடம் சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிலக்கல்லில் 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பம்பையில் 2 ஆயிரம் சிறிய வாகனங்கள் நிறுத்தலாம். நிலக்கல், பம்பை சன்னிதானம் ஆகிய இடங்களில் படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. மரக்கூட்டத்தில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் பக்தர்கள் ஓய்வெடுக்க 1000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. குடிநீர், சுக்கு வெந்நீர், பிஸ்கெட் ஆகியவை பக்தர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* சபரிமலையில் பூஜை, பிரசாத கட்டணங்கள் விவரம்
அரவணை பாயசம் – ரூ.100, அப்பம் (7) – ரூ.45, நெய்யபிஷேகம் – ரூ.10, கணபதி ஹோமம் – ரூ.375, நித்திய பூஜை – ரூ.4000, உச்சிகால பூஜை – ரூ.3000, உஷபூஜை – ரூ.1500, கணபதி ஹோமம் – ரூ.38,400, படிபூஜை – ரூ.137,900, உதயாஸ்தமய பூஜை – ரூ.61,800, சகஸ்ரகலசம் – ரூ.91,250, லட்சார்ச்சனை – ரூ.12,500, துலாபாரம் – ரூ.625, உற்சவ பலி – ரூ.37,500, அஷ்டாபிஷேகம் – ரூ.6000, புஷ்பாபிஷேகம் – ரூ.12,500, அபிஷேகம் செய்த நெய் – 100 மிலி ரூ.100, முழுக்காப்பு – ரூ.950
* மாளிகைப்புரம் கோயில்
பகவதி சேவை – ரூ.250, மஞ்சள், குங்குமம் அபிஷேகம் – ரூ.50, மாலை, வடிபூஜை – ரூ.25, நவக்கிரக பூஜை – ரூ.450, ஒற்றைகிரக பூஜை -ரூ.100, அஷ்டோத்திர அர்ச்சனை – ரூ.30, சுயம்வரார்ச்சனை – ரூ.50, மலர் நிவேத்யம் – ரூ.20
The post பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை கோயில் நடை திறப்பு: மண்டலகாலம் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.