பாதுகாப்புக்கு ஆபத்து ரயில் வரும்போது ரீல்ஸ் தயாரித்தால் வழக்குப்பதிவு: ரயில்வே வாரியம் எச்சரிக்கை

புதுடெல்லி: ரயில் இயக்கத்திற்கு இடையூறாக ரயில் வரும் போது ரீல்ஸ் தயாரித்தால் வழக்குப்பதிவு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டத்தில் உள்ள கனக்புரா மற்றும் தனக்யா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் மஹிந்திரா தார் எஸ்யூவியை அனுமதியின்றி ஓட்டி ஸ்டண்ட் செய்ய முயன்ற ஒரு நபர் மீது ஆர்பிஎப் போலீசார் வழக்கு பதிவு செய்தது. சமூக ஊடகப் பதிவிற்காக தனது நண்பர்களால் படமெடுக்கப்பட்ட ரீலைப் பெற அந்த நபர் முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

அதே போல் சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்து குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியதாக கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பல இடங்களில் ரயில் வரும் போது ரீல்ஸ் எடுக்க முயன்ற பலர் சிக்கியுள்ளனர். சிலர் பலியாகி உள்ளனர். இதை தடுக்கும் வகையில் ரயில் இயக்கத்திற்கு அச்சுறுத்தலாக ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.

அந்த சுற்றறிக்கையில்,’மக்கள் ரீல் தயாரிப்பதற்கான அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டனர். அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பது மட்டுமல்லாமல், ரயில் பாதைகளில் பொருட்களை வைப்பதன் மூலமோ அல்லது வாகனங்களை இயக்குவதன் மூலமோ அல்லது ஓடும் ரயில்களில் உயிருக்கு ஆபத்தான சாகசங்களைச் செய்வதன் மூலமோ நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளின் பாதுகாப்பையும் பாதிக்கிறார்கள்.

செல்பி எடுக்கும் போது ரயில்கள் மோதி மக்கள் உயிரிழப்பதை வைரலான வீடியோக்கள் காட்டுகின்றன. குறுகிய நேரத்தில் ரயில் எவ்வளவு பகுதியைக் கடக்கும் என்பதை உணராமல் அவர்கள் தண்டவாளத்திற்கு மிக அருகில் சென்றதால் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். இனிமேல் விதிமுறைகளை மீறும் ரீல் படைப்பாளர்கள் மீது எந்தவித கருணையும் காட்டவேண்டாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பாதுகாப்புக்கு ஆபத்து ரயில் வரும்போது ரீல்ஸ் தயாரித்தால் வழக்குப்பதிவு: ரயில்வே வாரியம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: