திற்பரப்பு அருவியில் குளிக்க 7வது நாளாக இன்றும் தடை

குலசேகரம்: வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் மலைப்பகுதிகள், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணை, சிற்றாறு 1 அணைகளில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரால் கோதையாறு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தொடர்ந்து 8 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

மழை சற்று குறைவாக இருந்ததால் அணைகளில் இருந்து உபரிநீர் வேளியேற்றுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் ஒரு வாரம் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கடந்த வாரம் மீண்டும் கன மழையாக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் சராசரியாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. முறையே 18 அடி கொள்ளளவு உள்ள சிற்றாறு 1, சிற்றாறு 2 ஆகிய அணைகளின் நீர்மட்டம் 16 அடியை நெருங்கியது.

இதையடுத்து சிற்றாறு 1 அணையில் இருந்து 200 கன அடி நீர் மறுகால் மதகுகள் வழியாக கடந்த 9ம் தேதி திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாறு பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 7வது நாளாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் இன்றும் 7வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது.

The post திற்பரப்பு அருவியில் குளிக்க 7வது நாளாக இன்றும் தடை appeared first on Dinakaran.

Related Stories: