கரூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதல்: 23 மாணவர்கள் படுகாயம்

கரூர்: கரூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 23 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். கரூர் – கோவை சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நேற்று மாலை வகுப்புகள் முடிந்தவுடன் கல்லூரி பஸ்சில் வீட்டிற்கு புறப்பட்டனர். பஸ்சை வெள்ளியணை அருகே மாமரத்துபட்டியை சேர்ந்த பெரியசாமி(60) என்பவர் ஓட்டினார். இந்த பஸ் வழக்கமாக கரூரில் இருந்து சூலபுரம் வரை செல்வது வழக்கம்.

திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான சிமென்ட் ஆலையில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் புலியூரில் செயல்பட்டு வரும் அதே கம்பெனியின் ஆலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வெள்ளியணை அருகே குள்ளப்பட்டி-குளத்தூர் இடைப்பட்ட பகுதியில், நேற்று மாலை 6 மணியளவில் தனியார் சிமென்ட் லோடுடன் சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, கல்லூரி பேருந்து ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக கல்லூரி பஸ்சின் பின்பகுதியில் சரக்கு ரயில் மோதியது. இதில் டிரைவர் உள்பட 23 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் தெரிந்தவுடன், கரூரில் இருந்து சம்பவ இடத்திற்கு 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு, கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த கிரிசுதன் என்ற மாணவன் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ, கலெக்டர் ரவிக்குமார், கரூர் எம்பி ஜோதிமணி, டிஆர்ஓ விமல்ராஜ், தாசில்தார் முகமது பைசல், டிஎஸ்பி செல்வராஜ் ஆகியோர் காயம் அடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு தீவிர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: