திருமலை : ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணை அமெரிக்காவுக்கு அனுப்பிய அப்பெண்ணின் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சரூர்நகர் வெங்கடேஸ்வரா காலனி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பெரிசெட்டி ரேணுகாஆனந்த் (57). இவருக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசிக்கிறார். இளைய மகள் உன்னாதி (20). இவர் கல்லூரியில் படித்து வந்தார்.
பள்ளியில் படிக்கும்போது, உன்னாதிக்கு அவருடன் படிக்கும் அதே பகுதியை சேர்ந்த கோகிகர் பல்வீருடன் (22) பழக்கம் ஏற்பட்டது. அன்று முதல் கோகிகர் பல்வீர், உன்னாதியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். ஆனால் உன்னாதி, நட்பு அடிப்படையில் மட்டுமே பழகி வந்துள்ளார். இதற்கிடையில் உன்னாதி, இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். இதையறிந்த கோகிகர்பல்வீரும் அதே கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரிக்கு சென்ற பின்னரும், தன்னை காதலிக்கும்படி கோகிகர் பல்வீர் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த உன்னாதி, தனது தந்தையிடம் கூறினார்.
இதையடுத்து ரேணுகாஆனந்த், ேகாகிகர்பல்வீரிடம், ‘எனது மகளை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என எச்சரித்துள்ளார். இதற்கு சில மாதம் அமைதியாக இருந்த கோகிகர்பல்வீர், கடந்த 2 மாதத்திற்கு முன் ரேணுகாஆனந்த் வீட்டிற்கு சென்று உன்னாதியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ரேணுகாஆனந்த், கோகிகர்பல்வீரின் பெற்றோரை வரவழைத்து, மகனை கண்டிக்கும்படி கூறி அனுப்பி வைத்தார்.
இருப்பினும் பல்வீரால் தனது மகள் வாழ்க்கை பாதிக்கும் எனக்கருதிய ரேணுகாஆனந்த், தனது மூத்த மகள் வசிக்கும் அமெரிக்காவுக்கு உன்னாதியை அனுப்பி வைத்தார். இதனால் கோகிகர்பல்வீர் ஆத்திரமடைந்தார். தனது ஒருதலை காதலியை பிரித்த ரேணுகாஆனந்த்தை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி கடந்த 10ம் தேதி ரேணுகாஆனந்த் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றார். அங்கு ரேணுகாஆனந்த்திடம் தகராறு செய்தார். பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரேணுகாஆனந்தை நோக்கி சுட்டார். இதில் கண்ணில் தோட்டா பாய்ந்து ரேணுகாஆனந்த் படுகாயம் அடைந்தார். மேலும் அங்கிருந்த ஆனந்தின் காரையும் சேதப்படுத்திவிட்டு பைக்கில் ஏறி தப்பி சென்றுவிட்டார். படுகாயமடைந்த ரேணுகாஆனந்தை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து ரேணுகாஆனந்த் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகிகர் பல்வீரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். துப்பாக்கி மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஒருதலை காதலை தடுக்கும் வகையில் பெண்ணை அமெரிக்காவுக்கு அனுப்பிய தந்தையை சுட்டுக்கொல்ல முயற்சி appeared first on Dinakaran.