தி.நகர் நகைக்கடையில் போலி நகைகளை வைத்துவிட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகையுடன் பெண் ஊழியர் ஓட்டம்: சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

வளசரவாக்கம்: தீபாவளி நேரத்தில் போலி ஆவணங்கள் மூலம் நகைக்கடையில் பணியில் சேர்ந்து, போலி நகைகளை வைத்துவிட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்ற பெண் ஊழியரை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர். தி.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ஜெயின் (53). இவர், தி.நகர் நாயர் சாலையில் சிறிய அளவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தீபாவளி பண்டிகையின் போது வாடிக்கையாளர்கள் அதிகம் வருவார்கள் என்பதால், தீபாவளி பண்டிகைக்கு முன்பு, கடந்த 22ம் தேதி ரேவதி (28) என்பவரை, முறையாக ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்று பணியில் சேர்த்துள்ளார். இதற்கிடையே ரேவதி முன் அறிவிப்பு இல்லாமல் கடந்த 3ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை.

அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, போன் வேலை செய்யவில்லை. இதனால் சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின், கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, வேலையை விட்டு நிற்பதற்கு முன்பு, கடையில் யாரும் இல்லாத நேரத்தில், நகைகள் வைக்கும் பகுதியில் இருந்து சில நகைகளை ரேவதி எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. உடனே, கடையில் இருப்பு வைத்திருந்த நகைகளை ஆய்வு செய்தபோது, அதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை எடுத்து விட்டு, அதற்கு பதில் போலியான நகைகளை வைத்து இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் சுரேஷ் ஜெயின் சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுகளுடன் பெண் ஊழியர் ரேவதி மீது புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்திய போது, ரேவதி நகைகடையில் வேலைக்கு சேரும் போது கொடுத்த ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது. அதைதொடர்ந்து திட்டமிட்டு நகைகளை திருடும் நோக்கில் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்து நகைகளை திருடி சென்ற பெண்ணை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

The post தி.நகர் நகைக்கடையில் போலி நகைகளை வைத்துவிட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகையுடன் பெண் ஊழியர் ஓட்டம்: சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: