×

ஓசூர் பகுதிக்கு படையெடுக்கும் யானைக்கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ.11: பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, ஓசூர் பகுதிக்கு படையெடுக்கும் யானை கூட்டத்தால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை கண்காணித்து விரட்டும் பணியில் 70 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லையில், கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது.

இந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் அதிக அளவில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை கொண்டுள்ள தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி போன்ற வன சரகங்களில் உள்ள காடுகளில் ஏராளமான யானைகள் உள்ளது. இவை தவிர ஆண்டுதோறும் இடம்பெயர்ந்து வரும் யானைகள், அக்டோபர் முதல் 6 மாத காலம் இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் பிரிந்து முகாமிட்டு, அருகில் உள்ள கிராமங்களுக்கு இரவு நேரங்களில் சென்று விவசாய விளைபொருட்களை சேதப்படுத்துகின்றன. மேலும், சில நேரங்களில் மனிதர்களை தாக்குவதும், அதனால் மனித உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, யானைகள் விவசாய நிலங்களில் நுழையாமல் தடுக்க, சிலர் கள்ளத்தனமாக மின்வேலி அமைப்பதும், அதில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அண்மையில் அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், பல குழுக்களாக பிரிந்து கிருஷ்ணகிரி வன சரகத்தில் உள்ள மகாராஜகடை வனப்பகுதியில் 13 யானைகளும், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள், மேலுமலை, ஓசூர் அருகே உள்ள சானமாவு, சினிகிரிப்பள்ளி, போடூர்பள்ளம், அய்யூர் போன்ற பகுதிகளில் உள சிறு குன்றுகளில் முகாமிட்டு, அவ்வப்போது அருகில் உள்ள கிராமங்களில் சுற்றித்திரிகின்றன. யானைகள் நடமாட்டத்தால், பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

தற்போது கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 85க்கும் அதிகமான யானைகள் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதிகளில் பல்வேறு குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், பயிர்களை நாசம் செய்கின்றன. இதனிடையே, தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி வனச்சரகத்தில் 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, அதன் இடப்பெயர்வை தடுத்து வருகின்றனர். யானைகள் இடம் பெயர்ந்து ஓசூர், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு சென்றால், மேலும் விவசாய பயிர்கள் சேதமாகும். உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதிகளில் தான் யானைகள் முகாமிட்டுள்ளன. ஓசூர் வனப்பகுதிக்கு வரும் யானைகளை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினந்தோறும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை, வனத்துறை பணியாளர்கள், வேட்டை தடுப்பு பிரிவின் 8 முதல் 10 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஓசூர் அருகே சானமாவு பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான சினிகிரிபள்ளி, சானமாவு, ராமாபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யானைகள் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,’ என்றனர்.

The post ஓசூர் பகுதிக்கு படையெடுக்கும் யானைக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri ,Bannerghatta forest ,Tamil Nadu ,Karnataka ,Andhra ,
× RELATED வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பலி