கிருஷ்ணகிரி, டிச.30: பிலிகுண்டுலுவில் காவிரி கரையோரம் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்கா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பிலிகுண்டுலுவில் ஒருபுறம் காவிரி ஆறும், மறுபுறம் வனப்பகுதியும் அமைந்துள்ளது. அதேபோல், கர்நாடக மற்றும் தமிழகத்தை இணைத்தவாறு செல்லும் காவிரி ஆற்றில், மத்திய நீர்வளத்துறை நீர்வரத்து குறித்து அளவீடு செய்யப்படுகிறது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர், தமிழகத்தில் நுழையும் முக்கிய பகுதியாக பிலிகுண்டுலு உள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பிலிகுண்டுலுவிற்கு வந்து காவிரி கரையோரம் குவிந்துள்ள மணல் திட்டுகளில் அமர்ந்தும், குளியல் போட்டும், இயற்கை அழகை கண்டு ரசித்து, அங்கு சமைக்கும் மீன் குழம்பு மற்றும் மீன் வருவலை சுவைத்து சாப்பிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு அடுத்தபடியாக, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பிலிகுண்டுலுவில் காவிரி கரையோரம், வனத்துறை சார்பில் கடந்தாண்டு ₹7 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. அங்கு காவிரி கரையில் அமைந்துள்ள மரங்களில், சுற்றுலா பயணிகள் ஜிப்லைன் சாகச பயணம் செய்வதற்கும், தங்கும் குடில்கள், புல்வெளி தரைகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகளை கவரும் யானை மற்றும் காட்டெருமை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பரிசல் மூலம் அமைக்கப்பட்ட நிழற்குடை, பூங்காவை சுற்றி பார்க்க நடைபாதை உள்ளிட்ட 60 சதவீதம் பணிகளை முடித்துள்ளது. ஆனால் அதற்கு பின்னர், பணிகள் முழுமை பெறாததால் சுற்றுச்சூழல் பூங்காவில் செடிகள் முளைத்து, சமூகவிரோதிகள் மது அருந்தும் இடமாக மாறி உள்ளது.
மேலும், உரிய பாதுகாப்பு இல்லாமல், வனத்துறையினர் அமைத்துள்ள உபகரணங்கள் பாழடைந்து வருகிறது. பல கோடி செலவு செய்தும் பணி முழுமை பெறாததால், பிலிகுண்டுலுவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, சுற்றுச்சூழல் பூங்கா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘பிலிகுண்டுலுவில் வனப்பகுதியின் இடையே செல்லும் காவிரி கரையோரம் குவிந்துள்ள மணல் திட்டுகளில் அமர்ந்து ரசிக்கவும், குளிக்கவும் இந்த இடம் நன்றாக உள்ளது. அதேபோல், கரையோரம் லட்சக்கணக்கில் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளதை குழந்தைகள் கண்டு ரசிக்கின்றனர். தற்போது வனத்துறை சார்பில் அமைத்துள்ள பூங்கா பணி, முழுமை பெறாமல் பூங்கா பயனின்றி பாழடைந்து வருகிறது. இங்கு சுற்றிபார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. எனவே, சூழல் பூங்கா பணியை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மேலும், இங்குள்ள பட்டாம் பூச்சிகளை பாதுகாக்கவும், அப்பகுதியில் உயிரியல் பூங்கா அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு, தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழா செய்யும் நிலையில் உள்ளது. அங்கு போதிய பராமரிப்பு இல்லாததால், செடிகள் முளைத்துள்ளது. திறப்பு விழா செய்த பின்னர், தொடர்ந்து பராமரிக்கப்படும்,’ என்றனர்.
The post சுற்றுச்சூழல் பூங்கா பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? appeared first on Dinakaran.