வாயு கசிவால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு: நிர்வாகம் நடவடிக்கை

திருவொற்றியூர்: வாயு கசிவால் விடுமுறை அளிக்கப்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்த பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவொற்றியூர் கிராம தெருவில் விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1900 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், கடந்த மாதம் விஷவாயு கசிவு காரணமாக 42 மாணவிகளுக்கு மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பின்னர், கடந்த 4ம் தேதி பள்ளி திறக்கப்பட்டபோது, மீண்டும் 9 மாணவிகள் வாந்தி, மயக்கம், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து இருமுறை, வாயு கசிவால் மாணவிகள் பாதிக்கப்பட்டதால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி செயல்படாது என அரசு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் நவீன இந்திரங்களை கொண்டு பள்ளி வளாகத்தில் காற்று தரம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு வரை தொடர்ந்து 5 நாட்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு மாசு கட்டுப்பட்ட வாரியம் மற்றும் தனியார் பள்ளி இயக்குனரக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அவர்களது ஆலோசனைக்கு பின் பள்ளியை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியை திறப்பதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் பெற்றோர்களின் கோரிக்கை அடிப்படையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில நாட்களாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி திறக்கப்படும் வரை மற்ற வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

The post வாயு கசிவால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு: நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: