×

ரிங் ரோடு திட்டத்தால் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்

ஓசூர், நவ.6: ஓசூர் வனக்கோட்ட பகுதிகளில் ரிங் ரோடு அமைக்கும்பட்சத்தில் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இயற்கை சூழல் கொண்ட மேம்பாலங்கள் அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா தேசியப் பூங்கா மற்றும் காவிரி உயிரின சரணாலயத்திலிருந்து, ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 200க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதிக்கு ஆண்டாண்டு காலமாக வருவது வழக்கம். இந்த யானைகள் தளி, ஜவளகிரி வனப்பகுதியில் நுழைந்து தேன்கனிக்கோட்டை, நொகனூர், ஊடேதுர்கம், சானமாவு, செட்டிப்பள்ளி, மகாராஜாகடை வனப்பகுதி வழியாக ஆந்திர மாநிலம் கவுண்டன்யா சரணாலயம் மற்றும் வெங்கடேஷ்வரா சரணாலயம் வரை சென்று, மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஓசூர் வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

நாளடைவில் கல் குவாரிகள் அதிகரிப்பால், யானைகளின் வழித்தடம் பறிபோனது. இதனால், விளைநிலங்களில் இறங்கி செல்லும்போது, உணவுக்காக பயிர்களை சேதப்படுத்துவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மேலும், யானைகள்-மனித மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. விளை நிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனப்பகுதியில் கம்பி வேலிகள், சூரிய சக்திவேலி, யானை தாண்டா அகழிகளை வனத் துறையினர் அமைத்துள்ளனர். மேலும், வனப்பகுதியில் யானைகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கச் செய்வதுடன், தீவனப் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. எனினும், விளை நிலங்களை யானைகள் சேதப்படுத்துவது தொடர்கிறது. ஓசூர் வனக்கோட்டம் தளி மற்றும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்ராம்பாளையம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 150 முதல் 200 யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து ஓசூரைச் சுற்றி 44 கி.மீ., தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை(எஸ்.டி.ஆர்.ஆர்) சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு(948) அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலையானது கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியில் இருந்து தொடங்கி மதகொண்டப்பள்ளி அருகே தமிழகத்திற்குள் நுழைந்து தளி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, கெலமங்கலம் சாலை, ராயக்கோட்டை சாலை, சென்னை தேசிய நெடுஞ்சாலை, பாகலூர் சாலை உள்ளிட்ட சாலைகளை இணைத்துக் கொண்டு மீண்டும் பெங்களூரு விமான நிலையம் நோக்கி செல்கின்றது. பெங்களூரு புறநகர் பகுதியான ஹோஸ்பேட் மற்றும் தமிழ்நாடு எல்லைப்பகுதியான ஓசூரை இணைக்கும் புதிய சாலை விரிவாக்க பணிகள் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு, பெங்களூரு நகருக்கு மத்தியில் இருக்கும் அவுட்டர் ரிங் சாலையை விட பெரிய வட்டமாக அமைந்துள்ளது. இந்த சாலையானது பெங்களூரு கிழக்கு பகுதியில் தொட்டப்பல்லபுரா, தேவனஹள்ளி, ஹோஸ்பேட் மற்றும் ஓசூரை இணைக்கிறது. இதேபோல், மேற்கு பகுதியில் மாகடி, ராமநகரா, கனகப்புரா, ஆனேக்கல், ஓசூர் ஆகியவற்றை இணைக்கிறது. குறிப்பாக யானைகளின் வழித்தடத்தில் இந்த ரிங் ரோடு அமைய உள்ளது. இதனால், யானைகள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வரும் பாதைகள் மாயமாகும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காகவும், உணவுக்காகவும் குடகுமலை மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதியிலிருந்து ஓசூர் வனப்பகுதிக்கு யானைகள் வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் யானைகள் வரும் பாதை கிரானைட் குவாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு தேடி வரும் யானைகள், வழித்தடத்தில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன. தந்தங்களுக்காக ஆண் யானைகள் கொல்லப்பட்டு வருவதால், தற்போது பெண் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. யானைகள் போடும் எச்சத்தில் மிஞ்சும் விதை, கொட்டைகள் மூலம் செடி-கொடிகள் வளர்ந்து காடுகள் உருவாகிறது.

யானைகளால் மற்ற உயிரினங்களுக்கும் உணவு கிடைக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் யானைகளுக்கு உணவு சரியாக கிடைப்பதில்லை. கிழக்கு மலைத்தொடரில் பெரும்பாலான மலைகள் குவாரிகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. யானைகளை எதிரியாகப் பார்க்கும் நிலை உள்ளது. உண்மையில், விவசாயிகளின் நண்பன் யானை. எனவே, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளின் வழிப்பாதையில் ரிங் ரோடு மற்றும் தார் சாலைகள் அமைக்கும்பட்சத்தில், இயற்கை சூழல் கொண்ட மேம்பாலங்களை உருவாக்கிட வேண்டும். பல மேலை நாடுகளில் இதுபோல மேம்பாலங்கள் அமைத்து வெற்றி கண்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post ரிங் ரோடு திட்டத்தால் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Bannerghatta National Park, Karnataka State ,Road ,Dinakaran ,
× RELATED குப்பையில் விழுந்த 2 பவுன் நகையை மீட்டு ஒப்படைப்பு