×

கோவை மாநகரில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் நேரில் ஆய்வு

கோவை, நவ. 6: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வடவள்ளி பி.என்.ஆர்.நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள், கான்கிரீட் கலவை மூலமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை, தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு, ஆய்வுசெய்தார். பின்னர், கே.என்.ஜி புதூர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, மேற்கு மண்டலம் 17வது வார்டுக்கு உட்பட்ட சேரன் நகர் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய சிக்கன அடிப்படையில் இணையத்தின் வாயிலாக சுமார் 400 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வுசெய்தார்.

குடிநீர் விநியோக முறைகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பிறகு, மத்திய மண்டலம் காந்திபுரம் நேரு வீதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்ச்சாலையின் தரத்தை ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் சிவக்குமார், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வானை, மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மாநகர தலைமை பொறியாளர் முருகேசன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி கமிஷனர் துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி பொறியாளர்கள் ராஜேஷ் வேணுகோபால், குமரேசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழ்செல்வன், சுபஸ்ரீ உள்பட பலர் உடனிருந்தனர்.

The post கோவை மாநகரில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Coimbatore ,Vadavalli PNR Nagar ,Coimbatore West Zone ,Tamil Nadu ,Muruganandam ,
× RELATED ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக...