அவதூறு பேச்சுக்காக மற்றொரு வழக்கும் பதிவானது கோயில் விழாவுக்கு ஆம்புலன்சில் சென்ற ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு

திருவனந்தபுரம்: திருச்சூர் பூரம் திருவிழாவில் ஆம்புலன்சில் சென்ற விவகாரம் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான அவதூறு பேச்சு ஆகியவை தொடர்பாக ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் வருடம்தோறும் நடைபெறும் பூரம் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதை முன்னிட்டு நடைபெறும் 30க்கும் மேற்பட்ட யானைகள் பங்குபெறும் குடைமாற்றம் நிகழ்ச்சி மற்றும் வாண வேடிக்கையை பார்ப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பூரம் திருவிழாவின் போது போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்தது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த சுரேஷ் கோபி சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தான் ஆம்புலன்சில் செல்லவில்லை என்றும், காரில் தான் சென்றதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே சுரேஷ் கோபி ஆம்புலன்சில் செல்லும் வீடியோ வெளியானது. இந்நிலையில் நோயாளிகள் மட்டும் செல்ல வேண்டிய ஆம்புலன்சில் விதிகளை மீறி சென்ற சுரேஷ் கோபி மீது திருச்சூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவில் இடைத்தேர்தல் நடைபெறும் சேலக்கரை சட்டமன்றத் தொகுதியில் பாஜ கூட்டணி வேட்பாளரை ஆதரித்து சுரேஷ் கோபி பிரசாரம் செய்தார்.

அப்போது ஒரு கூட்டத்தில் அவர் பேசுகையில், ஒரு தந்தைக்கு பிறந்திருந்தால் திருச்சூர் பூரம் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியுமா என்றார். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அவதூறாக பேசிய சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சேலக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது சேலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post அவதூறு பேச்சுக்காக மற்றொரு வழக்கும் பதிவானது கோயில் விழாவுக்கு ஆம்புலன்சில் சென்ற ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: