117வது ஜெயந்தி, 62வது குருபூஜை விழா தேவர் நினைவிடத்தில் முதல்வர்,தலைவர்கள் இன்று மரியாதை

ராமநாதபுரம்: பசும்பொன்னில் இன்று நடக்கும் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அமைப்பினர், பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில், 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா நேற்று முன்தினம் காலை ஆன்மிக விழாவாக தொடங்கியது.

பொதுமக்கள் வாடகை வாகனங்களில் செல்ல தடை இருப்பதால் பசும்பொன் வந்து செல்ல, அரசு சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேற்று 300 பஸ்கள் இயக்கப்பட்டன.
இன்று 900 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் தேவர் நினைவாலயத்தில் இன்று காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட முதல்வர், நேற்றிரவு 8.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கு அமைச்சர்கள், மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் முதல்வரை உற்சாகமாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து காரில் கிளம்பிய முதல்வர், மதுரை அழகர்கோவில் ரோட்டிலுள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கினார்.

இன்று காலை 7.40 மணிக்கு கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் முழுஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் கார் மூலம் பசும்பொன் சென்று தேவர் நினைவாலயத்தில் மரியாதை செய்கிறார். மேலும் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ எம்பி, பாஜ, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சினர். முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனத் தலைவர் கருணாஸ் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post 117வது ஜெயந்தி, 62வது குருபூஜை விழா தேவர் நினைவிடத்தில் முதல்வர்,தலைவர்கள் இன்று மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: