தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மதுரை, மேலூர் சந்தையில் ரூ.3 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை அமோகம்..!!

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் புத்தாடைகள், இனிப்புகள் பட்டாசுகளை போல் ஆடுகளின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் கால்நடை சந்தை அதிகாலையிலேயே கலைக்கட்டி இருந்தது. கச்சிராயன்பட்டி, கம்பூர், மேலவளவு, உரங்கான்பட்டி, வெள்ளளூர், தும்பைபட்டி, நாவினிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஆடுகள் சந்தையில் குவிக்கப்பட்டிருந்தன. தீபாவளிக்கு 2 நாட்களே உள்ள நிலையில் தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் பேரம்பேசி ஆடுகளை வாங்கி சென்றனர்.

சுமார் ரூ.3 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விராலிமலையில் உள்ள திங்கட்கிழமை சந்தையில் அதிகாலையிலேயே ஏராளமான ஆடுகள் நாட்டு கோழிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. 5 கிலோ உடைய ஆடுகள் ரூ.6 ஆயிரத்துக்கும் 8 கிலோ கொண்ட ஆடுகள் ரூ.10 வரையும் 10 கிலோ ஆடுகள் ரூ.12 ஆயிரத்துக்கும் கைமாறின. சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இறைச்சி வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

அதிகாலை முதல் காலை 8 மணி வரை சுமார் 3 கோடி அளவுக்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை நடைபெற்றதால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பேலூர் கால்நடை சந்தையிலும் ஆடுகள் விற்பனை அமோகமாகி இருந்தது. வாழப்பாடி, அறுநூற்று மலை, பருமந்துறை,மெய்யமலை, சந்தைமலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

அயோத்தியா பட்டிணம், சேலம், கொங்கனா புரம், எடப்பாடி, ஆத்தூர், மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பேலூர் கால்நடை சந்தையில் அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணிவரை சுமார் 2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றதால் ஆத்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடுகள் நல்ல விலைக்கு வாங்கப்பட்டதால் லாபம் அடைந்த விவசாயிகள் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

The post தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மதுரை, மேலூர் சந்தையில் ரூ.3 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை அமோகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: